CM MK Stalin: சதி வலை விரிக்கும் பாஜக.. தப்புக் கணக்கு போடும் அதிமுக - முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக்
CM Stalin On SIR: சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் மூலம் பாஜக சதி வலையை விரிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

CM Stalin On SIR: தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி போடுவது தப்பு கணக்கு தான் என, முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பாஜகவை சாடும் ஸ்டாலின்
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் இது” என வலியுறுத்தியுள்ளார்.
”தப்புக் கணக்கு போடும் பாஜக - அதிமுக”
தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர். பெண்கள் உள்ளிட்டோர் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் வென்றுவிடலாம் என பாஜக அதிமுக போடும் கணக்கு தப்புக்கணக்காகத்தான் ஆகும். எதிர்க்கட்சியான அதிமுக தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வைத்த நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது.
SIR-ஐ கைவிட வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது திமுக. அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவுக்கு உண்டு.
தொண்டர்களை சந்திக்கும் ஸ்டாலின்:
இதற்காக, வரும் 28-10-2025 மாமல்லபுரத்தில் நடைபெறும் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக் கூட்டத்தில் உடன்பிறப்புகளைச் சந்திக்க வருகிறேன். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாம் உழைப்பை விதைத்தால்தான், மாநில அளவிலான வெற்றியை அறுவடை செய்ய முடியும்! வார்டு நிர்வாகி முதல் மாநில நிர்வாகி வரை ஒவ்வொருவரும் அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற உழைப்போம், ஏழாவது முறையும் கழக ஆட்சியை அமைப்போம்.
தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
எனது தலைமையில் நடைபெறும் இந்தப் பயிற்சிக் கூட்டத்திற்குப் பிறகு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாக முகவர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவரும் ஒருங்கிணைந்து 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்பதை முன்னெடுக்க வேண்டும். மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கழகத்தினர் கடமையாற்ற வேண்டும்.
'என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன்' என ஒவ்வொரு கழக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால் 2026-இல் ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைவது உறுதி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது. தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள். அந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும்தான் உங்களைச் சந்திக்க வருகிறேன்”என முதலமைச்சர் ஸ்டாலின் தனது மடலில் குறிப்பிட்டுள்ளார்.





















