ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருக்கிறார்.

ADMK Sengottaiyan: நிர்மலா சீதாராமன் மற்றும் செங்கோட்டையன் இடையேயான சந்திப்பு, அதிமுக வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி?
பாஜக உடன் கூட்டணி என்பதே கிடையாது என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அண்மையில் தனது நிலைப்பட்டை மாற்றினார். இதனிடையே, எடப்பாடி மற்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்பட்டது. இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதையும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் தான், அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி, பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசினார். இதனைதொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன.
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்:
தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்தே அமித் ஷாவிடம் பேசியதாக எடப்பாடி விளக்கம் அளித்தார். ஆனால், கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததகாவும், அதற்கு சில நிபந்தனைகளை எடப்பாடி முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலையை கட்டுப்படுத்த வேண்டும், டெல்லி தலைமையிடம் தான் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என பல நிபந்தனைகளை அவர் முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவற்றில் சில டெல்லி பாஜக தலைமைக்கு பிடிக்கவில்லை எனவும், எடப்பாடியை மேலும் நெருக்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி விரைந்த செங்கோட்டையன்:
இத்தகையை சூழலில் தான் செங்கோட்டையன் டெல்லி விரைந்துள்ளார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசியுள்ளார். எடப்பாடியை அனைத்து வகையிலும் தங்கள் வழிக்கு கொண்டு வர செங்கோட்டையனை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகக்வே அவசர அவசரமாக செங்கோட்டைனை டெல்லிக்கு வரவழைத்து நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவின் அடுத்த திட்டங்கள்?
இரட்டை இலையை முடக்கி அதிமுகவின் அணிகளை தனது தலைமையில் ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு செக் வைக்கும் வகையில் பாஜக காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் செங்கோட்டையன் அந்தஸ்தை உயர்த்தக்கூடிய வகையில் மத்திய அரசின் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. தான் பார்த்து அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்த எடப்பாடி முதலமைச்சர் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார், தான் அவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டுமா? என்ற மனக்கசப்பு செங்கோட்டையனுக்கு நீண்ட காலமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கான பணிகளை பாஜக முன்னெடுத்துள்ளது. அதன் முடிவில் எடப்பாடி தங்களுக்கு இணங்காவிட்டால், அதிமுகவின் ஒட்டுமொத்த தலைமையாக செங்கோட்டையனை முன்னிறுத்தி, கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணவும் பாஜக விரும்புவதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
”எனக்கு தெரியாது” - எடப்பாடி பழனிசாமி:
செங்கோட்டையன் மதுரையிலிருந்து விமானம் மூலம் ரகசியமாக டெல்லி சென்று திரும்பியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “செங்கோட்டையன் டெல்லி சென்று வந்தது குறித்து எனக்கு தெரியாது” என பதிலளித்துள்ளார். அமித் ஷா மற்றும் எடப்பாடி சந்திப்பை தொடர்ந்து, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் தான், செங்கோட்டையனும் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.





















