MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்ற எந்தவொரு நிறுவனத்தையும் திமுகவிற்கு எதிராக பயன்படுத்த பாஜக தயாராகிக் கொண்டிருப்பதாக கட்சி நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளது.இன்னும் 4 முதல் 5 மாத காலமே இருப்பதால் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என தற்போது வரை 4 முனை போட்டியானது உறுதியாகியுள்ளது. எனவே இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணிக்கமுடியாத நிலையாக உள்ளது. அதிலும் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய், தனது ரசிகர்கள் படையால் நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ளார். எனவே சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் வாக்கு சதவிகிதம் அனைவருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு பக்கம் அதிமுகவும் ஆளுங்கட்சியான திமுகவிற்கு டப் கொடுக்க பாஜகவை முதல் கட்டமாக தங்கள் அணியில் இணைத்த நிலையில், அடுத்ததாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. எனவே தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியது. வீடு வீடாக சென்று திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறியும், புதிய வாக்காளர்களை திமுகவில் இணைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அடுத்ததாக தொகுதியில் உள்ள பிரச்சனைகளை கேட்டறியும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளோடு ஒன் டூ ஒன் மீட்டிங் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தொகுதி நிலவரம், கூட்டணியின் வாக்கு சதவிகிதம், வெற்றி வாய்ப்பு, உட்கட்சி மோதல் தொடர்பாக கருத்துகளை கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியில் திருத்த பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பணியால் வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பெயர்களை நீக்க வாய்ப்புள்ளதாக கூறி திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் கட்சி நிர்வாகிகள் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தியுது.
இந்த பரபரப்பான நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் பணி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடர்பாக ஆலோசனைகளை மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். அப்போது மாவட்ட செயலாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வரவிருக்கும் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது எனவே அதனை நிர்வாகிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதே நேரம் எந்தவொரு தகுதி இல்லாத வாக்காளரையும் பட்டியலில் இணைத்துவிட கூடாது இதனையும் கட்சி நிர்வாகிகள் சரி பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திமுகவை வீழ்த்த பாஜக திட்டம்
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் SIR குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் BLOக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என்று சொல்கிறார்கள் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்து விடக் கூடாது என்பதற்காக பாஜக திட்டமிட்டு வருவதாக கூறிய அவர், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்ற எந்தவொரு நிறுவனத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே யார் வந்தாலும் நாம் பார்த்துக் கொள்ளலாம். களம் நம்முடையதுதான் என மு.க. ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பேசியுள்ளார்.





















