Assembly vs General Election: நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
நாடு முழுவதுக்குமான சட்டம் இயற்றும் நாடாளுமன்றம் குறித்தும், மாநிலத்துக்கு மட்டும் இயற்றும் சட்டப்பேரவை குறித்தும் தெரிந்து கொள்வோம்.
இந்திய நாடு மக்களாட்சி தன்மை கொண்டது. அதாவது, மக்கள்தான் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களை தேர்வு செய்து அதன் மூலமாக மாநில முதலமைச்சர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், மாநிலங்களுக்கு தேவையான சட்டங்களை சட்டப்பேரவை மூலமாகவும், நாடு முழுவதற்குமான தேவையான சட்டங்களை நாடாளுமன்றம் மூலமாகவும் இயற்றப்படுகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் குறித்து எளிமையாகவும் சுருக்கமாகவும் தெரிந்து கொள்வோம்.
நாடாளுமன்றம்:
நாடாளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர், மக்களவை ( லோக்சபா ) மற்றும் ராஜ்யசபா ( மாநிலங்களவை) ஆகியவற்றை உள்ளடக்கியது. நாடு முழுவதற்குமான சட்டங்களை இயற்ற இரு அவைகளின் ஒப்புதல் தேவை. இரு அவைகளின் ஒப்புதலை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின் சட்டமானது நடைமுறைக்கு வரும்.
மக்களை உறுப்பினர்கள் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனால்தான் இதை மக்களவை என அழைக்கிறோம். நாடாளுமன்றத்தில் அதிகபட்சமாக 550 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என இந்திய அரசியலமைப்பு சட்டம் தெரிவிக்கிறது. தற்போதுவரை, 543 உறுப்பினர்கள் உள்ளனர்.
மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் உள்ளனர். அவையில், மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்,243 உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ ) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், துறை சார்ந்த நபர்கள் இடம் பெறும் வகையில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
சட்டப்பேரவை:
சட்டப்பேரவை என்பது ஆளுநர் , மேலவை மற்றும் கீழவையை உள்ளடக்கியது. சட்டமானது இரு அவைகளின் ஒப்புதலுக்கு பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து சட்டமானது நிறைவேற்றப்பட்டு நடைமுறிக்கு வருகிறது. கீழவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கீழவை உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் மூலமாகவும், ஆளுநரின் நியமனம் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்திய சட்டங்களை நிறைவேற்றுவதில், அரசியலமைப்பானது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று மத்திய பட்டியல், இரண்டு மாநில பட்டியல், மூன்றாவது பொது பட்டியல்.
மத்திய பட்டியலில் உள்ளதை நாடாளுமன்றம் மட்டுமே சட்டம் இயற்ற முடியும். மாநில பட்டியல் உள்ளதை மாநிலங்கள் மட்டுமே சட்டம் இயற்ற முடியும். பொது பட்டியலில் உள்ளதை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இரண்டும் சட்டம் இயற்றி கொள்ளலாம். ஆனால் மத்திய பட்டியலில் சட்டம் இயற்றுவதில், ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால், மத்திய அரசுக்கே சாதகமாக இருக்கும்.
தற்போது நமது நாட்டில் ஆறு மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது. அவை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகும். இதர மாநிலங்கள் ஒரு அவையை மட்டுமே கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஒரே அவை மட்டுமே உள்ளது. மொத்தம் 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இதிலிருந்து சட்டபேரவைக்கான சட்டம் இயற்றுவதில் சட்டப்பேரவையின் பங்கையும், நாடு முழுவதுக்கான சட்டங்கள இயற்றுவதில் நாடாளுமன்றத்தின் பங்கையும் அறியலாம்.
Also Read: Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?