Anbumani Ramadoss: பாமக தலைவராக அன்புமணி ராமதாஸுக்கு முடிசூட்டப்பட்டது.. திருவேற்காடு பொதுக்குழுவில் ஒரு மனதாக தேர்வு..
யானை சின்னத்தில் தேர்தலில் பாமக போட்டியிட்ட நிலையில் அச்சின்னம் பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு சென்றதால் 1998-ஆம் ஆண்டு முதல் அக்கட்சி மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தற்போதைய தலைவர் ஜி.கே.மணி தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சி
வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 1989ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இதில் முக்கிய பங்காற்றிய மருத்துவர் ராமதாஸ், தனது மருத்துவர் பணியை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டார். தொடக்கத்தில் யானை சின்னத்தில் தேர்தலில் பாமக போட்டியிட்ட நிலையில் அச்சின்னம் பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு சென்றதால் 1998ஆம் ஆண்டு முதல் அக்கட்சி மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
அன்புமணி ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாசின் மகனான அன்புமணி ராமதாஸ், ஏற்காடு மான்ஸ்போர்டு பள்ளியில் தொடக்கக்கல்வியையும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவக்கல்வியையும் முடித்தவர். திண்டிவனம் அருகே உள்ள நல்லலம் கிராமத்தின் தனது மருத்துவ பயிற்சியை மேற்கொண்ட அன்புமணி, கடந்த 2003ஆம் ஆண்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்லூரியில் மேக்ரோ எக்னாமிக்ஸ் படிப்பை முடித்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து அக்கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரானார்.
அக்காலத்தில் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார சேவையை வழங்குவதற்காக தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை (NRHM) 2005 ஆம் ஆண்டு செயல்படுத்தினார். ‘உலகில் எங்கும் செயல்படுத்தப்படாத மிகப்பெரிய வெற்றிகரமான சுகாதாரத் திட்டம்' என்று பொருளாதார வல்லுனர் ஜெஃப்ரி சாச்ஸால் ' அப்போது பாராட்டப்பட்டது.
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி
கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ், தருமபுரி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தேர்தைலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளர் இன்பசேகரனிடம் தோல்வி அடைந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் தோல்வி அடைந்த நிலையில், அதிமுக உதவியுடன் ராஜ்ஜியசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.