ராமதாஸை சந்தித்தாரா அன்புமணி? பரபரப்பு! ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம்: அதிர்ச்சியில் பாமக தொண்டர்கள்!
"சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்"

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக இருக்கக்கூடிய ராமதாஸ் மற்றும் அதன் கட்சியில் தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே, மோதல் போக்கு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இளைஞர் அணி தலைவரை நியமிப்பதில் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
செயல் தலைவராக நியமனம்
இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தந்தை மற்றும் மகன் இருவரும் சமாதானம் அடைந்தனர். இந்தநிலையில் வன்னியர் சங்க மாநாட்டிற்கான பணிகளை அன்புமணி ராமதாஸ் செய்து வந்தபோது, பாமக தலைவர் பதிவிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதாகவும், அவரை நிறுவனரான நானே செயல் தலைவராக நியமித்ததாக ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. தலைவர் பதவியை தானே எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மே மாதம் வன்னியர் சங்க மாநாடு நடைபெற்ற முடிந்தது. அதன் பிறகும் ராமதாஸ் - அன்புமணி இடையேய்லான பிரச்சனை தீரவில்லை. தொடர்ந்து அன்புமணி ராமதாசை, ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை எதிர்க்கட்சிகள் கூட அன்புமணி மீது வைக்காத விமர்சனங்களை, ராமதாஸ் முன் வைத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இரு அணிகளாக செயல்பட்ட பாமக
பாட்டாளி மக்கள் கட்சியில் 98 சதவீத மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அன்புமணி தரப்பாக செயல்பட்டனர். இதனால் கோபமடைந்த ராமதாஸ், தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவராகவும் மற்றும் மாவட்ட செயலாளராகவும் நியமித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பும், பொதுக்குழு கூட்டத்தை கூட்டி இருந்தது. இந்தநிலையில் அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொது குழுவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாகவும், தங்கள் தரப்பிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவோ தெரிவித்தனர். அதன் பிறகு கட்சியிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாகவும், ராமதாஸ் அறிவித்தார்.
திடீர் உடல்நலக்குறைவு
இந்தநிலையில் நேற்று இரவு பாமக நிறுவனர் ராமதாஸிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், எப்பொழுதும் போல மூணு மாதத்திற்கு ஒருமுறை, மருத்துவ பரிசோதனைக்காக ராமதாஸ் செல்வது வழக்கம். அதேபோன்று சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருப்பதாக தெரிவித்தனர்.
தந்தையை பார்க்க ஓடிச் சென்ற அன்புமணி
ராமதாஸ் அன்புமணியை தொடர்ந்து பல விதமாக விமர்சனம் செய்து வந்தாலும், அன்புமணி ராமதாஸ் மேடைகளில் "மருத்துவர் ராமதாஸ் தான் நம்முடைய குல சாமி"அவரது கனவை நினைவாக்க நாம் பாடுபடுவோம் என்றே தொடர்ந்து பேசி வந்தார். அன்புமணியின் இந்த செயல் பாமகவினர் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்தது. அந்தவகையில் தனது தந்தை ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அறிந்த அன்புமணி, உடனடியாக காலையே ராமதாசை சந்திப்பதற்கு அப்போலோ மருத்துவமனையில் விரைந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி ராமதாஸ் பேட்டி
இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, நேற்று மாலை மருத்துவர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அந்த ஆஞ்சியோகிராமில் ரத்த குழாயில் இருதயத்திற்கு செல்கின்ற ரத்தக் குழாய்கள் நன்றாக இருக்கிறது.
பயப்படுவதற்கு எதுவும் இல்லை, எந்த பிரச்சினையும் இல்லை என்று இருதய மருத்துவ நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்கின்ற மாத்திரைகள் எடுக்க வேண்டும். மற்றபடி பயப்படுவதற்கு எதுவும் இல்லை என மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஐ.சி.வில் இருக்கிறார் அதனால் பார்க்க முடியவில்லை. இன்னும் ஆறு மணி நேரத்தில் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு விடுவார் என தெரிவித்தார்






















