நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக உறுப்பினர்களை கட்சியை விட்டு தூக்கிய அதிமுக தலைமை
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஊராட்சி வார்டு உறுப்பினர்களை அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சத்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், அந்த பதவி காலியாக இருப்பதாக ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் மொத்தம் உள்ள 17 வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒத்துக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, ஜனவரி 11-ம் தேதி நடந்த மறைமுகத் தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த ஆர். சத்யா தலைவராகவும், செல்வக்குமார் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அப்போதையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தமிழகத்தில் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியை கைப்பற்ற திமுக சார்பில் பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டன. இதில், துணைத் தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் திமுகவில் இணைத்தனர்.இதையடுத்து, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் உறுப்பினர்கள் பலர் மனு அளித்தனர். இதற்கிடையே, சத்யா நீதிமன்றத்தை அணுகினார். இதில், மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் கூட்டம் முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்பட்டு நம்பிக்கை இல்லா தீர்மானக் கூட்டத்தை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக உள்ள சத்யா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் துணைத் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போதைய தலைவர் சத்யா மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பிரியா, பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தற்போதையை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா பதவியை இழந்தார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக நடந்த கூட்டத்தில் பதிவான வீடியோ காட்சிகளை நீதிமன்றத்துக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார்.மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக இருந்த அதிமுவைச் சேர்ந்த சத்யா மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத தீர்மானத்துக்கு ஆதரவாக 14 பேர் வாக்களித்தனர். இதில், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக மகளிரணி செயலாளர் தேவ விண்ணரசி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தேவராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் அழகேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலாளர் பாலசரஸ்வதி ஆகியோர் அதிமுகவில் பதவியில் உள்ளனர். மீதமுள்ள 9 பேர் ஏற்கெனவே வெற்றி பெற்ற திமுக சேர்ந்த 5 பேர், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்த 4 பேர் என மொத்தம் 14 பேர் ஆகும்.
இந்நிலையில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக மகளிரணி செயலாளர் தேவ விண்ணரசி (மாவட்ட ஊராட்சி குழு 17 வது வார்டு), மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தேவராஜ்(மாவட்ட ஊராட்சி குழு 8 வது வார்டு), புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன்(மாவட்ட ஊராட்சி குழு 3 வது வார்டு), ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் அழகேசன்( மாவட்ட ஊராட்சிக்குழு 12 வது வார்டு), பாலசரஸ்வதி(மாவட்ட ஊராட்சி குழு 11 வது வார்டு) ஆகியோரை அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி உள்ளது
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி அதிமுக கைகளில் இருந்தது. இதனை உடைக்கவும் பஞ்சாயத்தை கைப்பற்றவும் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பணியினை விறுவிறுப்பாக்கினார். ஒவ்வொருவராக இழுக்க துவங்கி தற்போது திமுகவின் கைகளுக்குள் மாவட்ட பஞ்சாயத்தையும் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் தனது தீவிர ஆதரவாளரான உமரி சங்கரின் மனைவியும், 16-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான பிரம்மசக்தியை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக்கவும் முடிவு செய்து உள்ளார் என்கின்றனர் திமுகவினர்.