Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!
அதிமுகவில் இருக்கும் பிரச்னை ஊருக்கே தெரியும். அதுதான் தினமும் பேப்பரில் எல்லாம் வருகிறதே. அதிமுக தலைமைக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்பதும், வேலை செய்பவர்களை அங்கீகரிக்கவில்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு
அதிமுகவில் திறமைக்கோ, தொழில் தர்மத்திற்கோ மதிப்பில்லை, வழிநடத்தும் தலைமை சரியில்லை என கூறி அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவை வழிநடத்தியவர்களில்முக்கியமான நபரான அஸ்பயர் சுவாமிநாதன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்களில் இருந்தும் ராஜினாமா செய்திருக்கிறார். கட்சியை விட்டு விலகியது ஏன் என்பது குறித்து சுவாமிநாதனிடம் கேட்டோம், அதற்கு அவர் அளித்த பதில்கள் கீழே :-
கேள்வி : திடீரென அதிமுகவில் இருந்து விலகியது ஏன் ?
பதில் : திடீர் என்றெல்லாம் இல்லை, இது நீண்ட நாட்களாகவே என் மனதில் இருந்தது தான். அதிமுகதான் இந்தியாவில் எந்த கட்சியுமே சிந்தித்து பார்க்காத நேரத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற அணியை உருவாக்கினார்கள். அப்போது ஐடி விங் அணிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது குறைந்தப்பட்சம் கூட இல்லை என்பதை உணர்கிறேன். நாங்கள் சொன்ன விஷயங்களை எடுத்துக்கொண்டிருந்தால், இந்த தேர்தலில் கூட அதிமுக எளிதாக வெற்றிப் பெற்றிருக்கும். எனக்கு மட்டும் அல்ல இந்த தகவல் தொழில்நுட்ப அணியில் இருக்கக் கூடிய ஒரு லட்சம் பேருக்குமான குரலாகதான் நான் ஒலித்தேன். ஆனால் அவர்களின் வேலைக்கும் விசுவாசத்திற்கும் எந்த அங்கீகாரமும் கொடுக்கப்படாததால் நான் இப்போது கட்சியை விட்டு விலகியிருக்கிறேன்.
கேள்வி : தலைமை மேல் உங்களுக்கு என்ன அதிருப்தி ? இரட்டை தலைமையாக இருப்பதால் அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்று நினைக்கின்றீர்களா ?
பதில் : நான் என்ன சொல்றேன்னா, ஒரு Vision, ஒரு Direction இல்லாம கட்சி போய்கிட்டு இருக்கு அவ்ளோதான். இதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள், இதற்கு மேல் இதனை நான் விரிவாக சொல்ல விரும்பவில்லை.
கேள்வி : நீங்கள் ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் உங்களுக்கான அங்கீகாரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு தரவில்லையா ?
பதில் : ஒபிஎஸ் பிரிந்தபோது அவரோடு முதலில் போய் நின்ன ஆட்களில் நானும் ஒருவன். அன்று I SUPPORT OPS என்ற ஹாஷ்டாக்கை உருவாக்கி இந்திய அளவில் கவனிக்க வைத்தேன். கட்சி இணைந்த பிறகு இந்த அணி, அந்த அணி என்றில்லை, எல்லாம் ஒரே கட்சிதான், இரட்டை இலை தான் நமது சின்னம் என்று சொன்ன ஒபிஎஸ் இன்று வரை அப்படிதான் இருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில் மிக பெரிய அளவில் ஹிட் அடித்த பிரச்சாரம் ‘மனசெல்லாம் ஈபிஎஸ், மக்களுக்காக ஈபிஎஸ்’ என்பதுதான், அதற்கான என்னை அழைத்து அவர் பாராட்டவும் செய்தார். அப்படி இருக்கும்போது கூட தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
கேள்வி : அதிமுக தேர்தலில் தோற்றதால்தான் நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றீர்களோ ? ஒருவேளை அதிமுக ஜெயித்திருந்தால் நீங்கள் தொடர்ந்திருப்பீர்கள் தானே ?
பதில் : ஆளுங்கட்சியாக அதிமுக இருந்தபோதுகூட அஸ்பயர் சுவாமிநாதன் என்னும் நான், எந்த பதவியும் பெறாமல்தான் இருந்தேன். அம்மா கல்வி இயக்கம் என்பதை ஆரம்பித்து ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு கல்வி சார்ந்த விஷயங்களை வழங்கியது, ரத்தத்தின் ரத்தங்களே என்ற பெயரில் ஒரு செயலியை வடிவமைத்தது என்பதெல்லாம் நான் எந்த பதவியிலும் இல்லாமலேயே செய்ததுதான். நீங்க கேட்ட இந்த கேள்வி பலருடைய சந்தேகங்களை தீர்க்கும் என நம்புகிறேன். போன வாரமே நான் ராஜினாமா கடிதத்தை கொடுத்து, இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர்கள் எந்த பதிலும் அளிக்காத நிலையில் இப்போது நானாகவே வெளியேறியிருக்கிறேன்.
கேள்வி : நேற்று புகழேந்தி வெளியேற்றப்பட்டார், இன்று ஒபிஎஸ் ஆதரவாளர் என்று அறியப்பட்ட சுவாமிநாதன் விலகியிருக்கிறாரே ?
பதில் : புகழேந்தி அதிமுக தலைமையால் வெளியேற்றப்பட்டார். ஆனால், நான் வெளியேறியிருக்கிறேன். என்னை ஒபிஎஸ் ஆதரவாளர்களாக பார்த்தவர்கள் கூட பின்னர் கட்சியின் விசுவாசியென அறிந்துக்கொண்டார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி என்னை ஒபிஎஸ் ஆளாக நினைத்தாரா என்று தெரியவில்லை ; அவர் மனதில் என்ன இருந்தது என்றும் இதுநாள் வரை எனக்கு புரியவில்லை. நான் கட்சியில் இருந்தவரை, கடைசி பால் வரை சிக்சர் அடித்துவிட்டுதான் வெளியேறி வந்திருக்கிறேன்.
கேள்வி : சசிகலா அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா ? கட்சியில் என்ன பிரச்னை இருக்கிறது ?
பதில் : அதிமுக ல இருக்கிற பிரச்னைதான் ஊருக்கே தெரியுமே. தினமும் பேப்பரில் கூட வருகிறதே. அதனை நான் வேறு சொல்ல வேண்டுமா ?
கேள்வி : சரி, அடுத்தது என்ன ?
பதில் : பார்ப்போம், கடவுள் விடும் வழி !