எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் வருகை: அதிமுகவில் மாற்றம் வருமா? திமுக கோட்டையில் வெற்றி பெற வியூகம்!
"காஞ்சிபுரத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவுள்ளதால், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்"

அண்ணா பிறந்த மண்ணாக இருப்பதால் காஞ்சிபுரம் திராவிட கட்சிகளின், கோட்டையாக பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் வெற்றி பெறுவது என்பது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளுக்கும் கௌரவமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியும் திமுக மற்றும் அதிமுக ஆகிய நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
திமுகவின் தொடர் வெற்றி
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைந்திருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில், வட மாவட்டத்தில் செல்வாக்காக இருக்கக்கூடிய பாமக கூட்டணி குறைந்த பிறகும் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்திருந்தது.
உத்திரமேரூர் பகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம், வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவினார். அதேபோன்று திமுக ஆட்சியில் நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது. அதிமுக காஞ்சிபுரம் நாயடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து இரண்டு முறை தோல்வியை சந்தித்துள்ளது. திமுகவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் வெற்றியை பெற்று வருவதால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலையும் அந்த வெற்றியை தக்க வைக்க திமுக காய்களை நகர்த்தி வருகிறது.
வெற்றிக்காக ஏங்கும் அதிமுக
2016-இல் சட்டமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோல்வியை சந்தித்து வருவதால், எப்படியாவது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கம்பேக் கொடுத்து விட வேண்டும் என்று அதிமுக நிர்வாகி தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி இருக்கின்றனர். பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குவது, அதிமுக வாக்கு வங்கி சரிந்த இடங்கள் குறித்து, ஆய்வு மேற்கொள்வது என காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொண்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், காஞ்சிபுரத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருவது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை தரும். எப்போதுமே கட்சித் தலைவர்களின் சுற்றுப்பயணம் என்பது, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தேர்தலுக்கு தயார் செய்யும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு பிறகு, அதிமுகவினர் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள் என தெரிவித்தனர். காஞ்சிபுரத்தில் இப்போதே தேர்தல் காய்ச்சல் அடிக்க தொடங்கியுள்ளது.





















