சர்ச்சை பேச்சு: பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மீது காவல்நிலையத்தில் அ.தி.மு.க. புகார்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மீது காவல்நிலையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குறித்து பேசிய கருத்து பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு அ.தி.மு.க.வினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பற்றி அவதூறாக பேசிய சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வினர் அளித்துள்ள இந்த புகாரில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பற்றி அவதூறாக பேசிய எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, தஞ்சையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரனும் பங்கேற்றிருந்தார். போராட்டத்தின்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒருவர்கூட அ.தி.மு.க.வில் இல்லை. அ.தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை எப்போதும் சட்டமன்றத்தில் பேசுவதில்லை. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் அண்ணாமலை துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று பேசினார்.
இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!!#Justiceforlavanaya @news7tamil pic.twitter.com/fYCGJo2ebc
— Nainar Nagenthiran (@NainarBJP) January 25, 2022
அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சற்று நேரத்தில் அ.தி.மு.க.வினர் அவருக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களிலும் அ.தி.மு.க.விற்கு கண்டனங்கள் குவிந்தது.
இதையடுத்து, நயினார் நாகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின்போது அ.தி.மு.க. பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கூறிய கருத்துகளுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்.” என்று விளக்கம் அளித்திருந்தார். பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வாக தற்போது பொறுப்பு வகிக்கும் நயினார் நாகேந்திரன் ஒருகாலத்தில் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில்தான் பா.ஜ.க. அங்கம் வகிக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்