Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..
2022 நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் மத்திய அரசின் முக்கிய சொத்துக்கள் வாயிலாக ரூ. 6.0 லட்சம் கோடி பணமாக்கல் செய்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
பட்ஜெட் என்றால் என்ன?
ஒவ்வொரு நிதியாண்டும், இந்திய அரசாங்கத்தின் வரவு- செலவீனங்கள் மதிப்பீட்டு அறிக்கையை குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்குமாறு செய்தல் வேண்டும். இந்த மதிப்பீட்டு விவர அறிக்கையே பட்ஜெட் எனப்படுகிறது.
2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் கட்ட நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 11-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய் கணக்கு:
இந்திய அரசாங்கத்துக்கு கீழ்கண்டவாறு ஒரு ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
1. கடன்கள், இதர மூலதனங்கள் மூலம் 36 பைசா, ஜிஎஸ்டி வரி 15 பைசா, வருமான வரி - 14 பைசா, வர்த்தக நிறுவனங்கள் மீதான் வரி- 13 பைசா, மத்திய அரசின் கலால் வரி (உதாரணமாக, பெட்ரோல்,டீசல் மீது போடப்படும் வரி). வரியில்லா வரி - 6 பைசா, கடனில்லா முதலீடுகள் - 5 பைசா, சுங்க வரி - 3 பைசா ஆகியவற்றின் மூலம் மத்திய அரசுக்கு 1 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது.
பின்குறிப்பு:
(i). கடனில்லா முதலீடுகள் என்பது மாநில அரசுகளுக்கு வழங்கிய கடன்களை மீட்பது, பங்கு விற்பனை செய்வது, அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது. தேசிய பணமாக்கல் ஆதார (National Monetisation Pipeline) திட்டத்தின் கீழ் 2022 நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் மத்திய அரசின் முக்கிய சொத்துக்கள் வாயிலாக ரூ. 6.0 லட்சம் கோடி பணமாக்கல் செய்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
(ii) 2019-இல், பெருநிறுவனங்களுக்கான வருவான வரி விகிதத்தை மத்திய அரசு அதிகளவு குறைத்தது. இதன் காரணமாக, மத்திய அரசுக்கு வரும் வருவாயில் 1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
(iii) பொதுவாக, மக்கள் உரிமைகளை விருவுபடுத்த நினைக்கும் சேமநல அரசு (Welfare State), வருமான வரி, மற்றும் பெருநிறுவனங்களின் மீதான வரி போன்ற நேரடி வரிகள் மூலமே வருவாயை பெருக்கிக் கொள்ளும். நேரடி வரிகள் வளர்வீத தன்மை (Progressive Taxation) என்று கருதப்படுகிறது. அதாவது, ஒருவரின் வருமானம் அதிகமாகும்போது அவர் அரசுக்கு அதிகமான வரிகளை செலுத்த வேண்டும். ஆனால், ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகள் தேய்வீத தன்மை (Regressive Taxation) என்று கருதப்படுகிறது. உதாரணமாக,100 ரூபாய் விலை மதிப்பு கொண்ட காலணியை வாங்கும்போது, செல்வந்தர்களுக்கும், பரம ஏழைகளுக்கும் ஒரே அளவிலான வரியை செலுத்துகின்றனர்.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில், கடந்தாண்டில் 84 சதவீத இந்திய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் குறைந்துள்ளதாக OXfam அறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், அதே கால கட்டத்தில் நாட்டின் ஒட்டு மொத்த செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியது. இதற்கு, முக்கிய காரணம், நேரடி வரியை விட, ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரியில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது என்றும் தெரிவித்திருந்தது.
(iv) கடன்கள், இதர மூலதனங்கள- நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சந்தையுடன் இணைக்கப்பட்ட கடன்களை நாடுகிறது..
ஒரு ரூபாய் செலவு:
மத்திய அரசு தனக்கு வரும் ஒரு ரூபாயில், கீழ்கண்டவாறு செலவு செய்கிறது.
கடனுக்கான வட்டி - 20 பைசா, மாநிலங்களுக்கான வரி பங்கீடு 15 பைசா, மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடு- 14 பைசா, நிதி ஆணையத்தின் பரிந்துரைகள்படி வழங்கப்படும் மானியம் - 10 பைசா,மத்திய அரசின் உதவிபெறும் திட்ட ஒதுக்கீடி - 9 பைசா, பாதுகாப்பு - 8 பைசா, மானியம் - 8 பைசா, ஓய்வூதியம் - 5 பைசா, இதர செலவீனங்கள் - 10 பைசா.