EPS: செந்தில் பாலாஜி நடிப்பைப் பார்த்தால் சிவாஜியே வியந்திருப்பார் - இபிஎஸ் விமர்சனம்
சிவாஜி மட்டும் உயிருடன் இருந்திருந்தால் செந்தில் பாலாஜி நடிப்பைக் கண்டு வியந்திருப்பார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி - சீமான் - விஜய் என முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி வலுவாக உள்ளது.
எடப்பாடி பரப்புரை:
தமிழ்நாட்டில் திமுக-விற்கு அரை நூற்றாண்டு காலமாக சவாலாக உள்ள அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு எந்தவொரு மிகப்பெரிய தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக-வை காட்டிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
இதையடுத்து, கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி இன்று அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
சிவாஜியே வியந்திருப்பார்:
அரவக்குறிச்சி பரப்புரை குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அரவக்குறிச்சி தொகுதியின் அன்பார்ந்த மக்களின் சிறப்பான வரவேற்பை மகிழ்வோடு பெற்று, அவர்களிடையே உரையாற்றினேன். பெரும் மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், தான் செல்லுகின்ற ஒவ்வொரு கட்சியிலும் வேறு வேறு மாதிரி நடிக்க கூடிய செந்தில் பாலாஜியின் நடிப்பைக் கண்டு வியந்திருப்பார்.
#அரவக்குறிச்சி தொகுதியின் அன்பார்ந்த மக்களின் சிறப்பான வரவேற்பை மகிழ்வோடு பெற்று, அவர்களிடையே உரையாற்றினேன்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 26, 2025
பெரும் மதிப்புக்குரிய நடிகர் திலகம்
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், தான் செல்லுகின்ற ஒவ்வொரு கட்சியிலும் வேறு வேறு மாதிரி நடிக்க கூடிய செந்தில்… pic.twitter.com/YoO8VDkvkT
அவர் இன்று சார்ந்திருக்கிற திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவை கருர் மாவட்ட மக்கள் எடுத்து விட்டார்கள். பதவி வெறியில் மக்களை மறந்த மு.க.ஸ்டாலின் திமுகவிற்கு தக்க பதிலை மக்கள் 2026-ல் தருவார்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார். இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்:
செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகித்தவர். ஆனால், கட்சியில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அதிமுக-வில் இருந்து விலகி தினகரன் தலைமையிலான அமமுக-வில் இணைந்தார். அதன்பின்னர், அங்கிருந்து விலகி திமுக-வில் இணைந்தார்.
பின்னர், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர், அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி சிறை சென்ற பின்பு தற்போது எம்.எல்.ஏ.வாக மட்டும் பொறுப்பு வகிக்கிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி விஜய் - ஸ்டாலின் இருவருக்கு எதிராகவும் தீவிரமாக பரப்புரையை மக்கள் மத்தியில் செய்து வருகிறார்.





















