காயத்ரி ரகுராமை அடுத்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற நடிகை கவுதமி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும், எடப்பாடி பழனிசாமி பணிகள் தன்னை ஈர்த்ததால் அதிமுகவில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் 25 வருடங்கள் பாஜகவில் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கவுதமி தான் எதனால் பாஜகவில் இருந்து விலகினே என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின்போது நடிகை கவுதமி அதிமுக பொதுச்செயலாளருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து வெளியான புத்தகமான “மாபெரும் தமிழ் கனவு” எனும் புத்தகத்தை பரிசாக கொடுத்தார்.
கவுதமிக்கு முன்னர் அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம், தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்துவந்தார். இதனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைமை அறிவித்தது. அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து தனது ராஜினாமா கடிதத்தை காயத்ரி ரகுராம் கொடுத்ததையடுத்து பாஜக தலைமை ஏற்றுக்கொண்டது.
பாஜக மற்றும் அண்ணாமலை எதிர்த்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார் காயத்ரி ரகுராம். மேலும், ஒரு சில சமயங்களில் பாஜக எதிராக கொள்கையை ஏற்றுகொண்ட அவர், ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வந்தார்.
இதையடுத்து, நடிகை காயத்ரி ரகுராம் திமுக அல்லது விசிகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்.
முன்பு ஒருநாள் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், “இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன். எந்த கட்சி அழைத்தாலும் அதில் இணைந்து மக்கள் பணியாற்றுவேன். என்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுகவில் கவுதமி இணைந்ததற்கு பின்னால் காயத்ரி ரகுராம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, நடிகை கவுதமி, “ அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மிகவும் பிடித்துள்ளதாகவும், அதனால்தான் அதிமுகவில் இணைந்துள்ளாதாகும் தெரிவித்துள்ளார். மேலும், தான் என்ன காரணத்தால் பாஜகவை விட்டு வெளியே வந்தேன் என்பதை காலம் வரும்போது தெரிவிப்பேன் எனக் கூறியுள்ளார். அந்த காரணத்தை நடிகை கவுதமி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.