Abp Nadu Exclusive: ஆதவ் அர்ஜுன் கருத்து தனிப்பட்ட கருத்து.. பின்னணியில் பாஜகவா ? - எஸ்.எஸ்.பாலாஜி பேட்டி
விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்த வரை கருத்து சுதந்திரம் உள்ளது. கட்சிகளில் நிறைய பேசுவார்கள், முடிவெடுப்பது கட்சியின் தலைமை தான்.
ஆதவ் அர்ஜுன் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து எனவும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தை கட்சி இருப்பதாக, விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தை கட்சி துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி ஏ..பி.பி நாடு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி.
கேள்வி: 2026 தேர்தலை மையமாக வைத்து, இந்த மாநாடு நடைபெறுவதாக பார்வை இருந்து வருகிறது. விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவரை வைத்து விசிக கணக்கு போடுகிறதா ?
எஸ்.எஸ்.பாலாஜி: தேர்தல் ரீதியான உறவு முறைகளை எப்போதுமே திருமாவளவன் மறைமுகமாக செய்ய மாட்டார். தேர்தல் அரசியலை முன்வைத்து திட்டமிடல் ஏதாவது விடுதலை சிறுத்தை மேற்கொண்டால் அது வெளிப்படையாகத்தான் இருக்கும். இன்று கூட எங்கள் கட்சித் தலைவர் வெளிப்படையாக தெரிவிக்கிறார், திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கேள்வி: ஆட்சியில் பங்கு வேண்டும் என விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் தனியார் தொலைக்காட்சியில் பேசினார். இதனைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்த பிறகும் மீண்டும் தனது கருத்தில் மாற்றம் இல்லை என தெரிவித்துள்ளாரே ?
எஸ்.எஸ்.பாலாஜி: விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்த வரை கருத்து சுதந்திரம் உள்ளது. கட்சிகளில் நிறைய பேசுவார்கள், முடிவெடுப்பது கட்சியின் தலைமை தான். கட்சியில் 11 துணைப் பொதுச் செயலாளர் இருக்கிறோம். அவர் ஊடகம் தொடர்பான இடத்திலிருந்து வந்தவர் என்பதால் அவருக்கு ஊடக வெளிச்சம் அதிகம் இருக்கிறது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பேசியதாக கூறுகிறீர்கள் ? . கட்சியைப் பொறுத்தவரை , வெளியே தெரியாமல் இருக்கும் பிற துணை பொதுச்செயலாளர்கள் கட்சியின் முடிவில் தாக்கத்தை செலுத்துபவர்கள். அவர் கூட்டணி தொடர்பாக எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டார். இந்த சர்ச்சைக்கு எண்டு கார்டு போட்டாகிவிட்டது.
கேள்வி: ராசா கூறுகையில், பாரதிய ஜனதா கட்சி ஆதவ் அர்ஜுனை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாரே ?
எஸ்.எஸ்.பாலாஜி: அவர் அவருடைய கருத்தை தெரிவிக்கிறார். அதுபோன்ற நினைப்பதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அதை அவருடைய கருத்தாக சொல்லி இருக்கிறார். அதை உள்ளே சென்று பார்க்க வேண்டியது இல்லை. நடவடிக்கை எடுப்பது குறித்தும் கட்சியின் தலைவர் முடிவு செய்வார். என்னுடைய பார்வையில், கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அவர் பேசியிருக்கிறார். கட்சியின் முடிவுகளில் கட்சியில் இருக்கும் அனைத்து நிர்வாகிகளும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். பொதுவெளியில் கூறிய கருத்தை, கட்சிக்கு உள்ளேயும் கூறலாம். அவர் பொதுவெளியில் கூறிய கருத்துக்கு மாறான கருத்து இருப்பவர்கள் அப்போது பேசுவார்கள், அப்போது இது குறித்து முடிவெடுக்கப்படும்
கேள்வி: 2026 தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சியின் தேர்தல் பாதை எப்படி இருக்கும்.
எஸ்.எஸ்.பாலாஜி: எந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தை கட்சியின் அடிப்படை கோட்பாடு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதுதான். 2021 தேர்தலின்போது மிகப்பெரிய நெருக்கடியில் ஏற்படுத்தி இருந்தார்கள், அப்போது கூட்டணியிலே இருப்போமா இல்லையா என கேள்வி எழும் வண்ணம் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தார்கள். விடுதலை சிறுத்தை கட்சி இருந்தால் திமுக கூட்டணிக்கு வாக்கு கிடைக்காது என மிகப் பெரிய பயத்தையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் அதை திமுக அப்போது கண்டு கொள்ளவில்லை.
அதுபோன்ற நெருக்கடி வந்த போது, தேர்தலில் நிற்கவில்லை என்றாலும் எங்களது ஆதரவு திமுகவிற்கு தான் என விசிக முடிவு செய்தது. சாதிய மற்றும் மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் வரக்கூடாது என்பதற்காக நாங்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தோம். விடுதலை சிறுத்தை கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினரை தாண்டி மதவாத கட்சிகள் வரக்கூடாது என்பதுதான் முக்கியம். திருமாவளவன் அவர்களை பொறுத்தவரை, எப்போதும் மக்கள் நலந்தான் முக்கியம். 2026 தேர்தலில் ஆட்சியில் அதிகாரம் என்ற சூழல் உருவாகினால், அதற்கான முன்னெடுப்பை எடுப்பார். கூட்டணி ஆட்சி என்பது, பெரிய கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணி கட்சிக்கு, அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் இதற்கான காலம் கனிய வேண்டும் என காத்திருக்கிறோம்.