Mayiladuthurai Leopard: அரியலூரில் சிசிடிவியில் சிக்கிய சிறுத்தை? இது புதுசா பழசா? குழம்பும் வனத்துறை
மயிலாடுதுறையை தொடர்ந்து அரியலூரில் சிறுத்தையின் நடமாட்ட வீடியோ சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை சிறுத்தை
காடுகளும், மலைகளும் இல்லாத விவசாய நிலங்கள் நிறைந்த சமதள பரப்பைக் கொண்டது மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம். இங்கு காட்டு விலங்குகளோ மனிதர்களை தாக்கக்கூடிய மூர்க்க குணம் கொண்ட விலங்குகள் என்பது அரிது. இவ்வாறான சூழலில் தான் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி இரவு மயிலாடுதுறை நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று தென்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட மாவட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர், சிறுத்தையை பிடிப்பதற்கு கடந்த 11 நாட்களாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதிலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பது அவர்களுக்கு குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. இதனால் 11 நாட்களைக் கடந்தும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறி வருவது மட்டுமின்றி, சிறுத்தை மயிலாடுதுறையை விட்டு திருவாரூர், தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று அங்கேயும் வனத்துறையினர் தங்கள் தேடுதல் பணியை விரிவுபடுத்தி உள்ளனர். மேலும் கடந்த 7 -ம் தேதிக்கு பின்னர் மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை குறித்து 5 நாட்களாக எந்த ஒரு தகவலும் இல்லை.
அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம்
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை
இந்த சூழலில் நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்து உள்ளது. இதனை அந்த பகுதியில் வெப்பத்தில் இருந்து காற்று வாங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து இருந்த புண்ணியகொடி மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் பார்த்து பயந்து வீட்டிற்கு ஓடிவந்து நடந்ததை கூறி உள்ளனர். சிறுத்தை மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
சிசிடிவியில் பதிவான சிறுத்தை
இதனையடுத்து செந்துறை காவல்துறையினர் வாகனத்தில் ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொது மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்து தேடினர். இதனால் அச்சமடைந்த சிறுத்தை மீண்டும் மருத்துவமனை அருகே இருந்த குடியிருப்பு உள்ளே மருத்துவர் அறிவுச்செல்வன் வீட்டின் பின்புறமும் சென்று மறைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்து இது சிறுத்தை தான் என்று உறுதி செய்தனர்.
தீவிர தேடுதல் வேட்டை
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் இங்கு வந்து தெர்மல் ட்ரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வனத்துறையை சேர்ந்தவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால், அங்கு கால் தடயங்கள் தெளிவாக கிடைக்காத நிலையில் இரண்டு பிரிவாக பிரிந்து மாலை வரை அருகில் உள்ள காடுகளில் மக்களை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி தேடுதல் பணியை மேற்கொண்டோம். இரவு நேரத்தில் தேடுதல் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் செந்துறை அரசு மருத்துவமனையில் 9 மணி அளவில் சிறுத்தை வேலியை தாண்டி போனதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்தபோது அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. மேலும் 11 மணி அளவில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் வீட்டின் அருகில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வனத்துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை, காவல் துறை ஆகியவை சேர்ந்து தேடுதல் பணியை முடுக்கி விட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு சிறுத்தையா...? குழப்பம் வனத்துறையினர்.
இந்த நிலையில் அரியலூரில் தென்பட்ட சிறுத்தை, மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தையும் ஒன்றா? என்று தற்போது உறுதிபடுத்த முடியாது, அரியலூர் சிறுத்தையின் தெளிவாக புகைப்படங்கள் கிடைத்தாலோ அல்லது அவற்றின் எச்சம், எடிஎன்ஏ ஆய்வு போன்ற சோதனைகளுக்கு பிறகே இது மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தையா அல்லது இது வேறு சிறுத்தையா என உறுதியாக கூற முடியும் என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.