இருசக்கர வாகன விற்பனையாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு: போக்குவரத்து அபராத குளறுபடிகளை களைய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை ...
போக்குவரத்துதுறையினரின் அபராத விதிப்பு குளறுபடிகளால் வாழ்வாதாரம் பாதிப்பதாக மயிலாடுதுறையில் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து காவல்துறையினரின் மோட்டார் வாகன விதிமீறல் அபராத விதிப்புகளில் உள்ள குளறுபடிகள் காரணமாக, பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விதிமீறல்களை உடனடியாகச் சரிசெய்ய அரசு தலையிட வேண்டும் என அச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத்தின் எட்டாவது ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டேவிட் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பல்வேறு முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தலைவர் டேவிட், தங்களது முக்கியக் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

அபராத விதிப்பில் குளறுபடிகள்
மாவட்டத் தலைவர் டேவிட் பேசும்போது, "போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் வாகன விதிமீறல்களுக்காக விதிக்கும் அபராதங்களில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். ஒரு பழைய இருசக்கர வாகனத்தை ஒரு விலைக்கு வாங்கும்போது, அதே விலைக்கு நிகரான அல்லது அதைவிட அதிகமான அபராதத் தொகை அந்த வாகனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கிறது. இது எங்கள் தொழிலை முழுமையாகப் பாதிக்கிறது" எனக் கவலை தெரிவித்தார்.
வரம்பு மீறிய அபராதங்கள்
ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக மூன்று அபராதங்கள் வரை விதிக்கலாம், அதனை எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் வாகன உரிமையாளருக்கு தெரிவித்து அந்த அபராதம் தொகையினை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் சில வாகனங்களுக்கு 10 முதல் 15 அபராதங்கள் வரை விதிக்கப்பட்டுள்ளன. "ஒரு பழைய இருசக்கர வாகனத்தின் விலையே ரூ.15,000 என்று இருந்தால், அதன் மீது ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் விலையும் அபராதத் தொகையும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதால், எங்களால் அந்த வாகனத்தை வாங்கி விற்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை தொடர்ந்தால், பழைய வாகன விற்பனைத் தொழில் முற்றிலுமாக அழிந்துவிடும்," என அவர் வேதனை தெரிவித்தார்.
விதிமீறல்களும், விசித்திரமான அபராதங்களும்
அபராதங்களில் உள்ள குளறுபடிகளுக்கு உதாரணமாக, அவர் சில சம்பவங்களைக் குறிப்பிட்டார். "நான்கு சக்கர வாகனங்களுக்குரிய விதிமீறல்களை இருசக்கர வாகனங்களுக்கு விதித்து அபராதம் போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஒரு வாகனம் விபத்துக்குள்ளாகி, ஓட்ட முடியாத நிலையில் மூன்று மாதங்களாக சர்வீஸ் நிலையத்தில் இருக்கும்போது, அந்த வாகனத்திற்கு மாவட்டம் கடந்து வேறு ஒரு பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பது, போக்குவரத்து அபராதங்களில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், கண்காணிப்பு முறைகளில் உள்ள பிழைகளையும் தெளிவாகக் காட்டுகிறது," என்று அவர் கூறினார்.

அரசு தலையிட வேண்டும்
இந்தக் குளறுபடிகள் காரணமாக, பல இருசக்கர வாகன விற்பனையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, வேறு தொழில்களைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். "இதுபோன்ற ஏகப்பட்ட குளறுபடிகள் போக்குவரத்து காவல்துறையினர் விதிக்கும் அபராதங்களில் இருப்பதால், அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, அபராத விதிமுறைகளைச் சரிசெய்ய வேண்டும். வாகன விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், நியாயமான முறையில் அபராதங்கள் விதிக்கப்படுவதை உறுதி செய்யவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில் அவர் கோரிக்கை விடுத்தார்.






















