Warren Buffett: ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டார், பிதாமகன் என்றெல்லாம் அழைக்கப்படும் பிரபல தொழிலதிபர் வாரன் பஃபெட் 'பெர்க்ஷ்யர் ஹேத்வே' நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது சொத்து மதிப்பு தெரியுமா.?

பங்குச் சந்தை முதலீடுகளின் மூலம் கோடிகளை குவித்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் வாரன் பஃபெட், ‘பெர்க்ஷயர் ஹேத்வே‘ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து 2025 டிசம்பர் 31-ம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக ஓய்வுபெற்றார். 60 ஆண்டு காலமாக அந்த பதவியில் இருந்த அவரால் தான், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீண்டு, புதிய உச்சத்திற்கு சென்றது. தற்போது அவரைப் பற்றியும், அவருடைய சொத்து மதிப்பு பற்றியும் பார்க்கலாம்.
‘பங்குச் சந்தையின் பிதாமகனான‘ வாரன் பஃபெட்
உலகம் முழுக்க எத்தனையோ தொழிலதிபர்கள் இருந்தாலும், வெகு சிலரே உலக அளவில் பிரபலமடைகிறார்க்ள். அந்த வகையில், நாடுகளை கடந்து புகழ்பெற்றவர் தான் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபெட்.
இவர், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘பெர்க்ஷயர் ஹேத்வே‘ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 1965-ம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் இந்த நிறுவனம் ஜவுளித் தொழிலை மேற்கொண்டு வந்தது. அதில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டபோதுதான் வாரன் பஃபெட் பதவியேற்றார்.
அதன்பிறகு அந்த நிறுவனம், மெல்ல மெல்ல நஷ்டத்தில் இருந்து மீளத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, காப்பீடு, ரயில், சாலை, எனர்ஜி, வாடிக்கையாளர்களுக்கு தேவையான பிற பிராண்டு சேவைகள் என பலவற்றில் முதலீடுகளை இவரது தலைமையின் கீழ் அந்த நிறுவனம் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து, பெருமளவிலான லாபத்தை சுவைக்கத் தொடங்கிய பெர்க்ஷயர் நிறுவனத்தின் பங்குகள் தற்போது 7,50,000 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. குறிப்பாக, பங்கு சந்தை முதலீட்டில் அந்நிறுவனம் கொடி கட்டி பறக்க தொடங்கியது. இதையடுத்து தான், வாரன் பஃபெட் ‛பங்குச் சந்தையின் பிதாமகன்' என்ற புனைப்பெயரை பெற்றார். அந்நிறுவனத்தின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தான்.
வயது மூப்பு காரணமாக ஓய்வை அறிவித்த வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்டின் தலைமையில் செயல்பட்டுவந்த ‘பெர்க்ஷயர் ஹேத்வே‘ நிறுவனத்தின் மொத்த மதிப்பு 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. உலக அளவில் முக்கிய நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தற்போது வாரன் பஃபெட் இல்லாமல் செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
95 வயதாகும் வாரன் பஃபெட், வயது மூப்பின் காரணமாக, 60 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, 2025 டிசம்பர் 31-ம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக ஓய்வும் பெற்றுவிட்டார். ஆனாலும், அவர் செயல் சாரா தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு
முதலீடுகளில் கில்லாடியான வாரன் பஃபெட், உலக முதலீட்டாளர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக விளங்கினார். தன்னுடைய முதலீட்டுத் திறன் மூலமாக கோடிகளை குவித்த அவர், தற்போது 140 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார்.
இருப்பினும், ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இவர் தங்கததில் முதலீடு செய்யவில்லை. தன்னுடைய முதலீட்டு உத்திகளோடு தங்கம் ஒத்துப் போகவில்லை என்று கூறிய அவர், ஒரு காலத்தில் பாரிகோல்ட் என்ற தங்க சுரங்க நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்.
ஆனால், 6 மாதங்களிலேயே அதிலிருந்து வெளியேறினார். அப்போது, தங்கம் ஒரு வளர்ச்சி அடையாத சொத்து என்றும் அதற்கு காரணம் கூறினார். நாம் செய்யும் முதலீடு, வளர்ச்சி அடையக் கூடிய மற்றும் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதையே கோல்டன் ரூலாக கொண்டுள்ள அவர், தங்கத்தின் விலை உயர்வுக்கு அச்சம் மட்டுமே காரணம் எனவும் கூறினார்.
எனினும், தற்போது தனது அசாத்திய முதலீட்டுத் திறமையால், உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார் வாரன் பஃபெட்.





















