முதலமைச்சர் ஸ்டாலினை பின் தொடரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் - காரணம் இதுதான்
தங்களை பணிநிரந்தம் செய்யக்கோரி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சார்பில் தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல், இசை உள்ளிட்ட பிரிவுகளில் 16,500 பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஐந்தாயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளை கடந்து பணி நிரந்தரம் செய்யாமல் படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டு தற்போது 12500 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
RK Suresh: சாதிய உணர்வு தப்பில்லை.. எல்லாரும் ஒன்றுதான்.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சால் பரபரப்பு
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், பணிநிரந்தரம் கோரிக்கை மனுவை பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ராஜேஷ், அருண்பாபு, பிரபாகரன், திவ்யசந்திரா, சாரதாமணி அளித்தனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டாக தெரிவித்தது, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 12 ஆண்டாக தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றோம். எங்களை பணி நிரந்தரம் செய்வதாக முதல்வர் சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்து இருந்தார். இதை நினைவூட்டி முதல்வர் வருகையின் போது தமிழகம் முழுவதும் கோரிக்கை மனு கொடுத்து வருகிறோம். திமுக தேர்தல் வாக்குறுதி 181ன் படி முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே நாங்கள் நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியும்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2021 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து இப்போதுதான் இந்த 2024 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2500 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. விலைவாசி உயர்வில் இந்த 12,500 ரூபாய் சம்பளம் எங்களுக்கு போதாது. பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்தால் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதுவே எங்களுக்கு பாதுகாப்பு. பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்த 10 லட்சம் மருத்துவ காப்பீடு ஆணை இன்னும் வழங்க வில்லை. இதை உடனே செய்ய வேண்டும். மே மாதம் சம்பளம் இல்லாமல் நாங்கள் தவிப்பதை கருணையுடன் நினைத்து இனிமேல் வழங்கவேண்டும். தற்போது செய்யும் இந்த வேலையை முழுநேரமாக நீட்டிக்க வேண்டும்.
இந்த வேலையை முறைப்படுத்தி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட தமிழக முதல்வர் மனிதாபிமானம் கொண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தது, ஒரு கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மாபெரும் திட்டத்தை செயல்படுத்தி காட்டினார் நமது தமிழக முதல்வர். அதுபோல் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.