மயிலாடுதுறை மாவட்டத்தின் தேர்தல் நிலவரம் இதுதான்; ஆட்சியர் சொன்ன அப்டேட்ஸ்..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மயிலாடுதுறை தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தேர்தல் கால அட்டவணை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அவர் விரிவான விளக்கங்களை அளித்தார்.
வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் விவரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது மொத்தம் 7,31,039 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,61,196 பேர், பெண்கள் 3,69,796 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 47 பேர் அடங்குவர். குறிப்பாக, 15,659 இளம் வாக்காளர்கள் (18-19 வயது) முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 7,137 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 950 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 54 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் பணிகளில் சுமார் 6,810 அலுவலர்கள் மற்றும் 700 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை
தேர்தல் புகார்களைத் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
* கட்டணமில்லா தொலைபேசி: 1800-233-9960
* வாக்காளர் உதவி எண்: 1950
* நேரடி எண்: 04364-299960
மேலும், 27 பறக்கும் படைகள், 27 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் 360° சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நன்னடத்தை விதிகள்
மேலும் அவர் கூறுகையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான முக்கிய கட்டுப்பாடுகளை வலியுறுத்தினார்.
*பிரச்சாரம்: மத, சாதி ரீதியான வெறுப்புப் பேச்சுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்து, கொள்கை ரீதியான விவாதங்களை மட்டுமே முன்னெடுக்க வேண்டும்.
*அனுமதிகள்: பொதுக்கூட்டம், ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் ஊர்வலங்களுக்கு Suvidha App மூலம் ஆன்லைனில் முன் அனுமதி பெறுவது கட்டாயம்.
* வேட்புமனு தாக்கல்: வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே உள்ளே செல்லலாம்.
* விளம்பரத் தடை: அரசு மற்றும் கல்வி நிறுவனக் கட்டிடங்களில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ய உரிமையாளரின் அனுமதி பெற்று, தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* பணப் போக்குவரத்து: உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்லக் கூடாது.
"சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் பதாகைகளைப் பயன்படுத்தக் கூடாது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.
























