Anna Award 2024: தமிழகம் முழுவதும் 100 ஆசிரியர்களுக்கு அண்ணா விருது; ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை- பட்டியல் இதோ!
Anna Award 2024: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு, மார்ச் 6ஆம் தேதி அண்ணா விருது வழங்கப்பட உள்ளது.
![Anna Award 2024: தமிழகம் முழுவதும் 100 ஆசிரியர்களுக்கு அண்ணா விருது; ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை- பட்டியல் இதோ! Anna Award 2024 Tamil Nadu 100 Govt School Teachers Across TN Rs 10 Lakh Incentive Know Full List Anna Award 2024: தமிழகம் முழுவதும் 100 ஆசிரியர்களுக்கு அண்ணா விருது; ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை- பட்டியல் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/6bfa21e414096eff1bead45a3f3ce0831709540250873332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு, மார்ச் 6ஆம் தேதி அண்ணா விருது வழங்கப்பட உள்ளது. அவர்கள் பணியாற்றும் பள்ளிக்குத் தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு, அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். உடன் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், மார்ச் 6ஆம் தேதி அண்ணா தலைமைத்துவ விருது பெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் பணியாற்றும் அரசுப் பள்ளிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.10.03 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
யாருக்கெல்லாம் விருது?
அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 50 தலைமை ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 50 தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 100 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
தேர்வு எப்படி?
முன்னதாக, அண்ணா தலைமைத்துவ விருதுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்ய மாநில, மாவட்ட அளவில் தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை பரிந்துரைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. பரிந்துரைகள் மாநிலக் குழுவுக்கு ஜன.20-க்குள் சமர்ப்பிக்கப்பட்டன. மாவட்ட விருது குழுவினர் பல்வேறு செயல்பாடுகளுக்கு மொத்தம் 500 மதிப்பெண்களை நிர்ணயம் செய்தனர். அதன் அடிப்படையில் பட்டியலைத் தயார் செய்து அளித்தனர். அதை அடிப்படையாகக் கொண்டு, விருதுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி உள்ளதாவது:
அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறும்ஆசிரியர்களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் எதிர்வரும் 06.03.2024 அன்று நடைபெற உள்ளது.
எனவே தங்கள் மாவட்டத்தில் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஊக்கத் தொகை தலா ரூ.10 இலட்சம் மற்றும் அப்பள்ளி தலைமை ஆசிரிருக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட உள்ளது.
யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவர் என நான்கு நபர்கள் என மேற்கண்ட கலையரங்கத்திற்கு காலை 08.00 மணியளவில் வருகை தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விருது வழங்கும் விழாவிற்கு வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு போக்குவரத்து / தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றினை அவரவர்களே தனது சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்.’’
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)