தொடரும் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் - மீண்டும் ஒரு இளைஞர் பலி...!
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் கடலில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
கடற்கரை
கடல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அனைவரும் பிடித்த ஒன்று என்றாலும் அதில் ஆபத்துகளும் அதிகம். கடலை அதன் போக்கில் அதன் கரையில் நின்று ரசிப்பதே அழகு, ஏன் என்றால் அதனை தவிர்த்து கடலில் இறங்கி அதன் தன்மை அறியாமல் ஏற்படும் உயிரிழப்புகள் ஏராளம். கடல் எப்போதும் ஒர் நிலையில் இருக்காது. அது பல நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுவது உண்டு. கடலை பற்றி நன்கு புரிந்த மீனவர்கள் கூட பலர் கடலின் சீற்றத்திற்கு பலியாகியுள்ளனர்.
அழகும், ஆபத்தும்
கார் மேகம் சூழ்ந்து, குளிர்ச்சியான காற்று நம் முகத்தை வருட, வருணன் நம்மை வரவேற்பதை பார்க்கும் போது நமது மனதே லேசாகி விடுகிறது. இதனாலேயே ஆபத்துக்கள் இருப்பினும் அனைவரும் கடலை நோக்கி தேடி செல்கிறோம்.
திருமுல்லைவாசல் கடற்கரை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ளது திருமுல்லைவாசல் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமம் கடலும் கடல் சார்ந்த இடமாக காட்சி அளிக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் அதிகாலையில் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில், எந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அழகிய பகுதியாக உள்ளதோ, அதே அளவுக்கு ஆபத்தும் நிறைந்துள்ளது. இது சுற்றுலா தலம் இல்லை என்றாலும், இங்குள்ள கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கடற்கரை பொதுமக்கள் பயன்படுத்தும் அளவிற்கானது அல்ல என்பதால், இங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து தரவில்லை.
தொடரும் உயிரிழப்புகள்
இங்கு அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவதும், மழை, சூறைக்காற்று நேரங்களில் ராட்சத அலைகள் எழுவதும் வாடிக்கையாகும். அவ்வாறு எழும் ராட்சத அலைகள் பல நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்துவிடும். இதுகுறித்த சரியான புரிதல்இல்லாததால், கடல் அலையில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை இளைஞர் பலி
இந்நிலையில் சென்னை கே.கே. நகரை சேர்ந்த 24 வயதான பவித்ரன் அவரது சகோதரன் ஆதித்யன் ஆகிய இருவரும் மயிலாடுதுறையிவ் உள்ள உறவினர் செல்வகுமார் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து பவித்ரன் ஆதித்யன் மற்றும் செல்வகுமாரின் மகன் ரித்திக் ரோஷன் ஆகிய மூவரும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, அருகில் உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்திற்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
அப்போது கடல் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி பவித்திரன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இதனைக் கண்ட மற்ற இருவரும் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளனர். இதனை அடுத்து அருகில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கிய பவித்திரனை தேடினர். அப்போது உயிரிழந்த நிலையில் பவித்திரன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் இறந்த பவித்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் பல்வேறு கடற்கரை நடைபெற்று அது தொடர்பான செய்திகளும் வெளிவந்தாலும் கடற்கரை ஆபத்தை குறித்து விழிப்புணர்வு பெறாமல் பலரும் மீண்டும் மீண்டும் கடலில் இறங்கி குளித்து தங்கள் உயிரை விடுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் திருமுல்லைவாசல் கடற்கரையில் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அரசு இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.