அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு - ஹெலிகாப்டர் மூலம் கோபுர கலசங்கள் மீது மலர் தூவல்....!
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அட்டவீரட்ட தலங்களில் 6-வது ஸ்தலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூரில் இந்து சமய அறநியைத்துறைக்கு உட்பட்ட அட்டவீரட்ட தலங்களில் 6-வது தலமான மிகவும் பழமையும், பிரசித்தி பெற்றதுமான வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தல வரலாறு
இங்கு தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக ஆபிசார வேல்வியில் தோன்றிய யானையை சிவன்மீது ஏவிவிட, சிவபெருமான் அந்த யானையை அழித்து, யானையின் உடலை கிழித்து அதன் தோலை போர்த்தி கொண்டு வீரச்செயல் நிகழ்த்திய தலமான இங்கு சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
43 யாக குண்டங்கள்
மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 43 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து குடமுழுக்கு தினமான இன்று 6 ஆம்கால யாகசாலை நடைபெற்றது. தொடர்ந்து பூஜையில் பூரணாகுதி மற்றும் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
School Annual Day: ஆசிரியர்களே...பள்ளிகளில் கட்டாயம் இது கூடாது- கல்வித்துறை கடும் எச்சரிக்கை!
புனிதநீர் ஊற்றல்
அதனை அடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து, கோயில் விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளம் ஒலிக்க, வான வேடிக்கைகள் முழங்க கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
அப்போது அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், பால் வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன் அறநிலையத்துறை ஏற்பாட்டில் ஹெலிகாப்டர் மூலம் கோபுர கலசங்கள் மீது பூக்களை தூவியும், ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர்.
அட்டவீரட்டத் தலங்கள்
சிவபெருமான் திருவிற்குடி, திருவதிகை, திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருக்குறுக்கை, திருவழுவூர், திருக்கடவூர், திருக்கோவிலூர் ஆகிய எட்டுத் திருத்தலங்களில் சிவன் பெருமான் நிகழ்த்திய வீரச் செயல்களை விளக்குவதால் இவ்வெட்டுத் தலங்களும் அட்டவீரட்டத் தலங்கள் எனப்படும். அட்டவீரட்ட திருத்தலங்களின் காரணங்களாக, "படைப்பு முழுவதற்கும் எட்டு ஆதாரங்கள் சொல்லப் பெற்றுள்ளன. அவை அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் ஒத்துவரும். இந்த எட்டிலும் இறைவனின் சக்திகள் கலந்து நிறைந்துள்ளன. இவையே இந்தப் படைப்பைக் காத்து வருகின்றன. இப்படிப் படைப்பு முழுவதிலும் விரவிக்கிடக்கும் ஆதாரப் பகுதியை நினைத்து வணங்கும் கோயில்களே அட்ட வீரட்டத்தலங்கள் ஆகும்.

