Donald Trump: ஆப்படித்துக் கொண்ட ட்ரம்ப்? உள்நாட்டில் கரைந்த கோடிகள், ”சிறகடித்து பறப்போம்” என நம்பிக்கை
Donald Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பு நடவடிக்கைகளால், சர்வதேச பங்குச் சந்தைகள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

Donald Trump: புதிய வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்க பொருளாதாரம் பெரும் வளர்ச்சி காணும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சரிந்த சர்வதேச சந்தைகள்:
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சரிநிகர் வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. புதிய வரிகளை எதிர்கொள்ளும் நாடுகள் மட்டுமின்றி, வரியை அறிவித்த அமெரிக்காவும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2020 க்குப் பிறகு அமெரிக்க சந்தை கண்டுள்ள பெரும் இழப்பில் S&P 500 4.8 சதவிகிதம், தொழில்நுட்பம் நிறைந்த நாஸ்டாக் 6.0 சதவிகிதமும், டவ் ஜோன்ஸ் 4.0 சதவிகிதமும் சரிந்தது. இதன் மூலம் அந்நாட்டு பங்குச்சந்தை 2.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்ததாக கூறப்படுகிறது. ட்ரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சந்தைகளிலும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டன. இந்திய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இன்றும் மும்பை பங்குச் சந்தை வீழ்ச்சி காணலாம் என கூறப்படுகிறது.
உலக நாடுகள் சொல்வது என்ன?
- சீனா உடனடியாக வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியதுடன், எதிர் வரிகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
- "கொடூரமான" புதிய வரிகள் "தெளிவுபடுத்தப்படும்" வரை அமெரிக்காவில் முதலீட்டை நிறுத்தி வைக்குமாறு ஃப்ரான்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்தார்
- இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, "அமெரிக்கர்களுடன் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விவாதத்தில்" ஈடுபட விரும்புவதாக குறிப்பிட்டார்
- சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா ஒரு அறிக்கையில், உலகப் பொருளாதாரத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும் இந்த நடவடிக்கைகளைத் தவிர்ப்பது முக்கியம்" என்று எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:
குடியரசுக் கட்சியின் செனட்டர் மிட்ச் மெக்கோனல், ட்ரம்புடன் முரண்பட்டு, வரிகளை "மோசமான கொள்கை" என்று சாடினார். மேலும், "அமெரிக்க தொழில்துறை மற்றும் தொழிலாளர்களின் நீண்டகால செழிப்பைப் பாதுகாக்க, நமது கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், அவர்களுக்கு எதிராக அல்ல" என்று மெக்கோனல் கூறினார்.
இது ஒரு அறுவை சிகிச்சை:
சந்தை நிலவரம் தொடர்பாக பேசியட்ரம்ப், ”அமெரிக்காவை வெளிநாட்டு உற்பத்தியாளர்களை நம்பியிருப்பதிலிருந்து விடுவிக்க விரும்புகிறேன். சந்தையின் தற்போதைய நிலவரம் எதிர்பார்க்கப்பட்டதுதான். நோயாளி (அமெரிக்கா) மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். பொருளாதாரத்தில் நிறைய சிக்கல்கள் இருந்தன. அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இது ஒரு செழிப்பான பொருளாதாரமாக இருக்கப் போகிறது. இது அற்புதமாக இருக்கும்." என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
”பொருளாதாரம் வீறுகொண்டு எழும்”
வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் பேசுகையில், “டொனால்ட் ட்ரம்ப் உலகப் பொருளாதாரத்தை நடத்தட்டும். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். வெள்ளை மாளிகையில் நீங்கள் டொனால்ட் டிரம்பை நம்ப வேண்டும். நீங்கள் உண்மையில் அமெரிக்காவுடன் சண்டையிட முடியாது. நீங்கள் தோற்கப் போகிறீர்கள். நாங்கள் இந்த உலகின் சுமோ மல்யுத்த வீரர்கள்” என உலக நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
வரி குண்டு:
சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. இதனால் புதியவரி விகிதம் அங்கு 54 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 20 சதவிகிதமும், ஜப்பானில் 24 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 26 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. புதிய வரிகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும், அதே நேரத்தில் அதிக வரிகள் ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















