TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
அரசுப் பேருந்தையே பெரும்பாலும் நம்பி இருக்கும் கிராம மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. இனி சிரமப்படாமல் பஸ் டிக்கெட்டை முன்பதிவு செய்ய அருமையான திட்டத்தை அரசு கொண்டுவருகிறது.

அரசுப் பேருந்துகளில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த பயணிகள், இனி இ-சேவை மையம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அரசுப் பேருந்தை நம்பியிருக்கும் பெரும்பாலான கிராமப்புற மக்கள்
அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம், தினமும் ஆயிரக்கணக்கானோர் தொலைதூர பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்பட, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், 20,000-த்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், மக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதில், தொலைதூர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், முக்கிய பேருந்து நிலையங்கள், ஆன்லைன் மற்றும் TNSTC உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மூலமாக முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். இந்நிலையில், நகர மக்களுக்கு தனியார் பேருந்து வசதிகள் உள்ளன. முக்கிய நகரங்களை இணைக்கும் தனியார் பேருந்துகள், பெரும்பாலும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுவதில்லை. ஆதனால், கிராமப்புற மக்கள், பெரும்பாலும் அரசுப் பேருந்தையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இ-சேவை மையம் மூலம் அரசுப் பேருந்து டிக்கெட் முன்பதிவு
இந்த சூழலில், கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள், பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, குறிப்பிட்ட பேருந்து நிலையங்களை தேடிச் செல்ல வேண்டும். அதிலும், பண்டிகை கால பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிடும். அப்போது, நகரங்களில் இருப்போர் பேருந்து நிலையங்களிலும், ஆன்லைனிலும் விரைவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடுவார்கள். இதனால், கிராமப்புற மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
இந்நிலையில், அவர்கள் பயனடையும் வகையில், பேருந்து டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இ-சேவை மையங்களிலும் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான இடங்களில் இ-சேவை மையங்கள் இயங்குவதால், கிராமப்புற மக்கள் எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அப்படி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டுமானால், அதையும் இ-சேவை மையம் மூலமாகவே செய்துகொள்ளலாம் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு நிச்சயம் ஒரு நற்செய்தியாகத் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.





















