மேலே மோடி ஆட்சி, கீழே இவங்க ஆட்சி வேண்டும் - திமுக அமைச்சர் முன்பு மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு
திருக்கடையூர் கோயிலில் நடைபெற்ற வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு முன்பு மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்
திருக்கடையூர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழாவில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முன்பு மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டும் மதுரை ஆதீனம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் உபயதாரர்களின் பங்களிப்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழா நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற வெள்ளி தேர் வெள்ளோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை ஆதீனம்
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆதீனங்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மதுரை ஆதீனம் பேசுகையில், தமிழகத்தில் ஆன்மீகமும், அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. ஆதீனங்களில் பொற்கால அருள் ஆட்சி நடத்தும் தருமபுரம் ஆதீனத்திற்கு நான் அடிமை. 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்கு வந்துள்ளேன். அமைச்சர் பெயர் சேகர்பாபு என்னுடைய பழைய பெயர் பகவதிபாபு. இருவரும் ஏன் சேர்ந்து இருக்கிறோம்? கோயில் நிலங்களுக்கு குத்தகை கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கிற பாபுக்களுக்கு ஆப்பு அடித்து ஒரே அமுக்காக அமுக்குவதற்காகத்தான் என்றார்.
சிறப்பாக செயல்பட்டும் துணை முதல்வர்
மேலும் தொடர்ந்து பேசியவர், ஆன்மீக அரசு என்று அமைச்சர் சொன்னார். ஆதீனங்களை ஒன்று கூட்டிய பெருமை அமைச்சருக்கு தான். சிறப்பான முறையில் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து வருகிறார்கள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளம் ஏற்பட்டபோது வெள்ளத்தில் மிதந்து மிதந்து வருகிறார்.
திமுக ஆட்சி வளர வேண்டும்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னது சேகர் பாபு செய்து காட்டியுள்ளார். நீண்ட காலம் வாழ வேண்டும் இந்த ஆட்சி வளர வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக டைட்டாக இருக்க வேண்டும். எனக்கும் அவருக்கும் சண்டை மூட்டி விட்டுள்ளனர். தருமபுரம் ஆதீனத்தில் தேவாரம் சொல்லித் தரப்படுகிறது. ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் கலைஞரின் ஆசி பெற்றவர். கலைஞர் முதல்வர் ஆனவுடன் தண்டபாணி தேசியருக்கு டாக்டர் பட்டம் அளித்தார். தருமபுர ஆதீனமும் ஐயா சேகர்பாபுவும் ஒன்று. இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு என்றார்.
மேலே நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். கீழே திமுக ஆட்சி
இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும், மேலே நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். கீழே திமுக ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான். சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம், பல்வேறு புலவர்களை உருவாக்கியுள்ளது. முனைவர்களாக உள்ளவர்களை படிக்க வைத்து ஆதீன புலவர்கள் ஆகவும், பண்பாளர்களாகவும் ஆக்கி உள்ளது தருமபுர ஆதீனம்.
திமுககாரன் என்று முத்திரை
அமைச்சர் சேகர்பாபு உடன் நெருங்கி பேசியதற்கு என்னை திமுககாரன் என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவன் நான். நல்ல காரியம் யார் செய்தாலும் பாராட்டுவேன். துணை முதலமைச்சர் உதயநிதி வெள்ளப்பெருக்கில் சிறப்பாக பணியாற்றினார் என்றார்.