கூண்டோடு காலியான சீர்காழி காவல்நிலைய காவலர்கள்- காரணம் என்ன?
சீர்காழியில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேர் வெட்டப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து ஏழு காவல்துறையினர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சீர்காழியில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த மைய பகுதியில் மூன்று பேர் வெட்டப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் அலட்சியமே காரணம் என புகார் எழுந்ததை தொடர்ந்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஏழு காவலர்களை பணிமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழியில் நடைபெற்ற கொலைவெறி தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் 40 வயதான மதன். இவர் சீர்காழி சட்டநாதர் கோயில் அருகே தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று சீர்காழி பிடாரி தெற்கு வீதி அருகே உள்ள டீக்கடை அருகே மதன் நின்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மதனை அடித்து, ஆடைகளை கிழித்து எரிந்து அவரது கால், உடல் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் கொடுரமாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மதனை அனுப்பி வைத்தனர்.
வெவ்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மதனின் சகோதரர் முறை உறவான 33 வயதான மணிகண்டன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் சீர்காழி உப்பனாற்று இடது கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் மணிகண்டன் கரையில் நிறுத்தி வைத்திருந்த அவருடைய இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு, ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சுரேஷையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
காயம் அடைந்த மணிகண்டன் மற்றும் சுரேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். ஏதேனும் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பட்ட பகலில் சீர்காழி காவல் நிலையம் மற்றும் சீர்காழி புதிய பேருந்து நிலையம், தாலுக்கா அலுவலகம் அருகில் அதிக மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் அச்சமடைய செய்துள்ளது.
சொல்லப்படும் காரணம்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அருணின் தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் மதன் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகார் பெற்றுக்கொண்டு அது குறித்து எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்தாகவும், மதன் காவல்நிலையத்தில் புகார் அளித்த காரணத்தால் ஆத்திரமடைந்த முதியவரின் மகன் அருண் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து மதன் மற்றும் அவரது சகோதரரை பட்டபகலில் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும், இரும்பு பைப்பாலும் அடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
ஆறுபேர் கைது
மேலும் முகத்தை மறைத்து மதன் என்பவரை பிரதான சாலை ஓரம் அடித்து போட்டு சட்டையை கிழித்து போடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் விளந்திடசமுத்திரம் ராஜா (எ) பூரணச்சந்திரன், சீர்காழி கச்சேரி ரோட்டை சேர்ந்த விக்னேஷ், பிடாரி கீழ வீதியைச் சேர்ந்த வினோத்குமார், ராதாநல்லூர் கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்த குற்றாலீஸ்வரன், சீர்காழி அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் 33, ஈசானியத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் 34 ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
ஏழு காவல்துறையினர் பணிமாற்றம்
இந்நிலையில் இந்த கொலை முயற்சி சம்பவம் போலீசாரின் மெத்தன போக்கால் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, சீர்காழி காவல்நிலைய ஆய்வாளர் சிவகுமாரை ஆயுதப்படைக்கும், சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை குத்தாலம் காவல்நிலையத்திற்கும், உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசனை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், எஸ்.எஸ்.ஐ கள் சதீஷ்குமார், ராஜாஜி, ஏட்டு குலோத்துங்கண் காவலர் அகஸ்டின் ஆகிய நான்கு பேரை மணல்மேடு போலீஸ் ஸ்டேஷனுக்கும் என மொத்தம் 7 பேரை அதிரடி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.