சீர்காழி சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.! பக்தர்கள் பரவசம்!
சீர்காழி சட்டை நாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் இன்றும், நாளை பிரசித்தி பெற்ற திருமுலைப்பால் உற்சவம் நடைபெற உள்ளது.
சீர்காழி சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
Gold Rate: புதிய உச்சம்... இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி.. ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை
திருஞானசம்பந்தர் வரலாறு
சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
ஆண்டு திருவிழா
கோயிலின் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ரிஷப லக்னத்தில் காலை 8:30 மணிக்கு கோயில் வசந்த மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் ஓத, தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சட்டைநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர் மற்றும் வாசனை திரவியப் பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீப ஆராதனை காட்டினர்.
தொடர்ந்து காலை 9:45 மணிக்கு சித்திரை பெருவிழா ரிஷப கொடி ஏற்றப்பட்டு, மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது . அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் நமசிவாய கோஷமிட்டு கொடியேற்றத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வு
சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான உமையம்மை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளிக்கும் திருமுலைப்பால் விழா நாளை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று மாலை திருக்கோளக்காவிற்கு திருஞானசம்பந்தர் எழுந்தருளி பதிகம் பாடி பொற்றாலம் பெறும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பல்லக்கில் சீர்காழி மீண்டருளும் காட்சியும் நடைபெற உள்ளது. பின்னர் 18-ம் தேதி சகோபரம், 19-ஆம் தேதி திருக்கல்யாணம், 21, 22 -ஆம் தேதிகளில் திருத்தேர், 26 -ஆம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி செந்தில் தலைமையிலானோர் செய்திருந்தனர்.