(Source: Poll of Polls)
பொறியாளர் கனவுடன் ஆற்றில் குளித்த இளைஞன் உயிரிழப்பு! மயிலாடுதுறையில் சோகம்
மயிலாடுதுறை அருகே பொறியியல் கல்லூரியில் பயில இருந்த இளைஞன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிறுவன் ஆற்றுச் சுழலில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் கல்வி பயில இருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள திருச்சிற்றம்பலம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் 17 வயதான சக்திசிவன். இவர் இந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்து இருந்தார். மேலும் வரும் ஆகஸ்ட் 10 -ஆம் தேதி கல்லூரிக்கு செல்லவிருந்த நிலையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் மெயின்ரோடு அருகே ஓடும் கும்கி மண்ணியாற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.
ஆற்றில் ஏற்பட்ட சுழல்
தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் உரிய நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இந்த சூழலில் ஆற்றுநீரில் சட்ரஸ் அருகே நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆற்றுச் சுழலில் சிக்கிய சக்திசிவன் நீரில் மூழ்கினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் சிலர் உடனடியாக அவரை மீட்க முயற்சித்தனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, ஆற்றுச் சுழலில் சிக்கியிருந்த சக்திசிவனை மீட்டு, உடனடியாக மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அதிர்ச்சி தகவல்
மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு சக்திசிவன் கொண்டு செல்லப்பட்டபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. தங்கள் மகன் பொறியியல் படிப்புக்கு செல்லவிருந்த நிலையில், இப்படி ஒரு சோகமான முடிவு நேர்ந்ததைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
காவல்துறையின் நடவடிக்கை
இந்தச் சம்பவம் குறித்து மணல்மேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணல்மேடு காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார், சக்திசிவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரிக்கை விடுத்த பொதுமக்கள்
இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “கும்கி மண்ணியாற்றில் ஆழமான பகுதிகள் உள்ளன. குறிப்பாக சட்ரஸ் அருகே ஆற்றுச் சுழல்கள் அதிகம் உருவாகின்றன. இது குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சோகச் சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப் படிப்பை முடித்து, பொறியியல் கல்லூரிக்கு செல்ல தயாராக இருந்த ஒரு இளைஞனின் கனவுகள் இப்படி நீரில் மூழ்கியது, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு பெரிய சோகச் செய்தியாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவம், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் குளிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது. மேலும், ஆபத்தான பகுதிகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.





















