தந்தைக்காக மகன் செய்த செயல் - மயிலாடுதுறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
மயிலாடுதுறையில் தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தந்தை படித்த பள்ளிக்கு மகன் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
மயிலாடுதுறையில் தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, வெளிநாட்டில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலைக்குச் சென்று சிறுக சிறுக சேர்த்த பணத்தை வைத்து தந்தை படித்த பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை வழங்கி மகன் அசத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி
பொதுவாக ஒரு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் இணைந்து அல்லது தனியாகவே அவர்கள் படித்த பள்ளிக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது நடைமுறை இருந்து வருகிறது. இவற்றுக்கு மாறாக மயிலாடுதுறையில் ஒரு பள்ளியில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது உள்ளது. அதில் தன் தந்தைக்காக மகன் தன் சொந்த செலவிலேயே தன் தந்தை படித்த பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சம்பவம் நடந்தேறி உள்ளது.
அப்பாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாரி. இவர் அமெரிக்காவில் தொழிலதிபராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரது குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். பாரி சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களுடன் வர இயலவில்லை, இந்த சூழலில் வரும் நவம்பர் மாதம் பாரிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், அப்போது அவர்கள் அமெரிக்காவில் இருப்பார் என்பதால் தனது அப்பாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அப்பா படித்த பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை மகன் அஸ்வந்த் ஏற்பாடு செய்துள்ளார். அதுவும் தன் தந்தையுடன் பயின்ற முன்னாள் மாணவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் இதனை செய்துள்ளார்.
தந்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மேலும் 1989 ஆம் ஆண்டு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனது தந்தையுடன் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி குடும்பத்தினர் துணையோடு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை மகன் அஸ்வந்த் இன்று நடத்தினார். பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் 49 மாணவர்களுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையினை பிரித்து வழங்கியுள்ளார்.
Biannual Admission: இனி ஆண்டுக்கு 2 முறை கல்லூரியில் சேரலாம்; யுஜிசி அதிரடி அறிவிப்பு - முழு விவரம்!
இரண்டு லட்சம் ரூபாயில் உதவிகள்
பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு 25 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூல் பேக் வழங்கி, 23 ஆயிரம் மதிப்பிலான ரிமோட் உடன் கூடிய ஒலிபெருக்கியையும் கொடுத்துள்ளார். பின்னர் தந்தையுடன் படித்த அப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அஸ்வந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். தந்தையின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மகன் பல ஆண்டுகளாக படித்துக் கொண்டு பகுதி நேர வேலைக்கு சென்று சிறுக சிறுக பணம் சேர்த்து தந்தை படித்த பள்ளிக்கே நலத்திட்ட உதவிகளை வழங்கியது அனைவரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் சமூக சேவகர் சீர்காழி மார்கோனி, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.