விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

விஜய்யின் ஜனநாயகனுக்கு முட்டுக்கட்டை
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து திரையரங்கில் பேனர்கள் கட்டி ரசிகர்கள் ஜனநாயகனை வரவேற்க தயாரான நிலையில், திடீர் திருப்பமாக ஜனநாயகன் திரைப்படத்தில் உள்ள ஒரு சில காட்சிகளால் தணிக்கை துறை சான்றிதழ் வழங்கவில்லை.
உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இதன் காரணமாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை நடத்தி கடந்த 9ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்க உத்தரவிட்டார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே தணிக்கை துறை சார்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டது. இதனையடுத்து அன்று மாலையே வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி தீர்ப்பிற்கு தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த சூழ்நிலையில் ஜனநாயகன் படக்குழு சார்பாக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். சென்சார் பதிலளிக்க ஏன் கால அவகாசம் அளிக்கவில்லை..? என தயாரிப்பு நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தனர். ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான உங்களது மனுவை விசாரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை எனவும் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதியாக கூறினார்.
உயர்நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ஜனநாயகம் திரைப்பட வழக்கை விசாரித்து வரும் நிலையில் நாங்கள் ஏன் இந்த வழக்கை இப்போது விசாரிக்க வேண்டும் என கேட்டு மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் உங்களுக்கு மட்டும் எதற்காக சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என கேட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை ஜனவரி 20க்குள் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






















