Maharaja Movie Review: மகாராஜாவாக வந்த விஜய் சேதுபதி.. 50வது படத்தில் கலங்கடித்தாரா.. முழு விமர்சனம் இதோ!
Maharaja Movie Review: விஜய் சேதுபதி நடித்து நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள மகாராஜா படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
Nithilan Swaminathan
Vijay Sethupathi , Barathiraja , Anurag Kashyap , Mamta Mohandas , Abhirami , Munishkanth , Boys Manikandan , Aruldoss , Singam Puli ,
Theatrical Release
Maharaja Movie Review in Tamil: விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவாகியிருக்கும் படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுராக் கஷ்யப் , மம்தா மோகன்தாஸ் , அபிராமி, நடராஜன் , பாய்ஸ் மணிகண்டன் , பாரதிராஜா , சிங்கம் புலி , அருள்தாஸ் , முனீஷ்காந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜ்னீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்பாய்லர்கள் இல்லாமல் மகாராஜா படத்தின் திரைவிமர்சனத்தைப் பார்க்கலாம்
மகாராஜா
சமூகத்தில் சரி தவறு என்று இரு நிலைகளுக்கு உட்படாத எல்லா விதமான கதைகளையும் பேசும் சுதந்திரத்தை கலை ஊடகங்கள் நமக்கு அளிக்கின்றன. எதார்த்தத்தில் நாம் பார்க்கும் குற்றங்களான பாலியல் வன்முறை , தீண்டாமை, போன்ற பிரச்சனைகள் அடிப்படையில் அறம் தவறும் செயல்கள். இந்த நிகழ்வுகளை படமாக மாற்றும் போது அதில் குற்றம் செய்தவனின் நிலையையும் பாதிக்கப்பட்டவரின் நிலையையும் உண்மைத்தன்மையுடன் மறுவிசாரணைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது.
மாறாக வெகுஜன சினிமா இயக்குநர்கள் அப்படியான கதைகளை சுவாரஸ்ய நோக்கத்திற்காக கற்பனையால் மிகைப்படுத்தவும் திரைக்கதை யுத்திகளை மட்டுமே கையாள்கிறார்கள்
பொழுதுபோக்கிற்காக கொலை செய்வது , வில்லனை வில்லனாக காட்ட அவர்களை பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்துபவர்களாக காட்டுவது, போன்ற அம்சங்கள் இந்த மாதிரியான கதைகளை பக்குவமாக கையாள்வதில் இன்னும் சிக்கலை தான் ஏற்படுத்துகின்றன.
மகாராஜா படம் திறமையாக கையாளப்பட்ட ஒரு திரைக்கதை யுத்தி. ஆனால் அதன் கதை இன்னும் உண்மைக்கு நெருக்கமானதாக இருந்திருக்க வேண்டும்
படத்தின் கதை
சலூன் கடை வைத்திருப்பவர் மகாராஜா ( விஜய் சேதுபதி) பெயருக்குதான் மகாராஜா ஆனால் தனது பெயருக்கு நேர்மாறான தன்மை கொண்டவர். எந்த வகையிலும் அதிகாரத்தன்மை இல்லாத ஒரு மனிதர். ஒரு விபத்தில் தனது மனைவி இறந்துவிட தன் மகளை தனியாக வளர்த்து வருகிறார். சலூன் கடை , மகள் இது இரண்டும் தான் மகாராஜாவின் உலகம். இவர்கள் தவிர்த்து இவர்கள் வீட்டில் உயிருள்ள இன்னொரு கதாபாத்திரமாக இருப்பது லஷ்மி என்கிற இரும்பு குப்பைத் தொட்டி. அந்த விபத்தில் தனது மகளின் உயிரை காப்பாற்றியதே அந்த குப்பைத் தொட்டிதான்.
தன் மகள் ஸ்போர்ட்ஸ் கேம்ப் சென்றிருக்கும் நிலையில் தனது குப்பைத் தொட்டியை திருடிவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார் மகாராஜா. ஒரு குப்பைத் தொட்டியை காணவில்லை என்று சொல்லும் ஒருவனை எந்த வகையில் எல்லாம் சுரண்ட முடியுமோ அப்படி சுரண்டுகிறார்கள். இதற்கிடையில் படத்தின் வில்லன் கதாபாத்திரமான அனுராக் கஷ்யப் அறிமுகப்படுத்தப்படுகிறார். வீடுபுகுந்து கொள்ளையடித்து பல கொலைகளையும் சர்வசாதாரணமாக செய்யும் அனுராக் கஷ்யப் தனது மனைவி அபிராமி மற்றும் மகள் மீது அதீத பாசம் வைத்திருக்கும் ஒருவராகவும் இருக்கிறார்.
அப்படி அந்த குப்பைத் தொட்டியில் என்னதான் இருக்கிறது. அதை யார் தான் திருடுகிறார்கள். ? குப்பைத் தொட்டிக்கும் வில்லனாக வரும் அனுராக் கஷ்யப்பிற்கும் என்ன தொடர்பு. இருவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்பது அவர்கள் இருவரும் மகள்மீது பாசத்தைக் கொட்டும் தந்தைகள். மேலோட்டமாக பார்க்கும்போது மிக அபத்தமாக தோன்றக்கூடிய கதை ஒன்றுக்குப் பின் மிக உணர்ச்சிவசமான கதை ஒன்றையும் இணைத்து ஒரு கதைசொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நித்திலன் ஸ்வாமிநாதன்.
படத்தில் இருக்கும் சில கதாபாத்திரங்களுக்கு ஒரு பொது அம்சம் இருக்கிறது. படத்தில் வரும் ஒரு சின்ன கதாபாத்திரம் செண்டிமெண்டாக ஒரு கூலிங் கிளாஸ் வைத்திருப்பார். அதை திருடிவிட்டார்கள் என்றதும் அவ்வளவு கோபப்படுகிறார். போலீஸ் என்று பெயர் வைத்த திருடன் ஒருவன் தன் கழுத்தில் செண்டிமெண்டாக ஒரு சாவியை தொடங்கவிட்டிருப்பான். இந்த இரு கதாபாத்திரத்திற்கு பெரிய அங்கம் கதையில் இல்லை என்றாலும் இரண்டு பேருமே சின்ன பொருளாக இருந்தாலும் அதன் மீது மனிதன் குறிப்பாக ஆண்கள் அதன் மீது கொள்ளும் உடைமை உணர்வு சில நேரங்களில் எவ்வளவு கண்மூடித்தனமானதாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறன. ஆண்கள் பார்வையில் பெண்கள் வெறும் அடையக் கூடிய ஒரு பொருளாக மட்டுமே பார்க்கப் படுவதை அங்கங்கு சில குறிப்புகளாக வைத்திருக்கிறார் இயக்குநர்.
அதுபோல தான் படத்தின் நாயகன் குப்பைத் தொட்டியை திருடிவிட்டார்கள் என்று புகாரளிக்கும்போது நமக்கு அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மகாராஜாவின் பற்று ஒரு பொருள் மீது இல்லை.
படத்தின் முதல் பாதி முழுக்க காமெடியான மூட் செட் செய்து நம்மை குழப்பத்தில் வைத்திருக்கும் இயக்குநர் இரண்டாம் இரண்டாம் பாதியில் கதையின் புதிர்களை எல்லாம் உடைத்து எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் எமோஷனலான ஒரு கதையுடன் நம்மை தொடர்புபடுத்த வைக்கிறார். இதில் விஜய் சேதுபதி தவிர்த்து போலீஸாக வரும் நடராஜன் , சிங்கம் புலியின் கதாபாத்திரங்கள் கொஞ்சம் கவனம் பெறுகின்றன.
விமர்சனம்
மகாராஜா திரைப்படம் இருவேறு உணர்வு நிலைகளை இணைக்கும் வகையிலான திரைக்கதை முறையை பயண்படுத்துகிறது. முதல் பாதியில் பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று இயக்குநர் நினைக்கிறார் . இரண்டாம் பாதியில் உணர்ச்சிவசப்பட வேண்டும் என்று நினைக்கிறார். முதல் பாதியில் இயக்குநர் நினைத்து வைத்த நகைச்சுவைத் தருணங்கள் ஒரு சில காட்சிகளைத் தவிர கொஞம் வர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் . இரண்டாம் பாதியில் கொஞ்சம் அதன் தீவிரத்தன்மையால் நம்மை கதைக்குள் இழுக்கிறார். ஆனால் இதற்காக அவர் எடுத்துக் கொண்ட மைய கதையான மிகமுக்கியமான சமூக பிரச்சனை ஒன்று இரண்டிற்கும் இடையில் ஒரு வியாபார பண்டமாக மட்டுமே மாறிவிடுகிறது என்பது படத்தின் மிகப்பெரிய பின்னடைவு.
சீரியஸான ஒரு சப்ஜெக்ட்டை கொஞ்சம் புதிய முறையில் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் பாலியல் வன்கொடுமை பற்றிய கதை சுவாரஸ்யமாக தான் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனைக்கு ஏன் இவ்வளவு கட்டுப்பட வேண்டும். த்ரில் , ட்விஸ்ட் என்று நகரும் கதையில் ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்கள் எமோஷனை விட்டுவிட்டு ட்விஸ்ட்டில் கவணம் செலுத்த தூண்டப்படுகிறார்கள்.
படத்தின் நடக்கும் பல முக்கியத் திருப்பங்கள் லாஜிக்கலாக இல்லாமல் தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளாக மட்டுமே இருக்கின்றன. இந்த தற்செயல் நிகழ்வுகளை எல்லாம் சேர்த்து கோர்வையாக ஒரு உணர்ச்சியை அளிப்பதில் இயக்குநர் தவறவிட்டிருக்கிறார்.
வில்லன் செல்வமாக வரும் அனுராக் கஷ்யப் கதாபாத்திரம் அதனளவில் நிறைய முரண்களை கொண்டிருக்கிறது.
நடிப்பு
விஜய் சேதுபதி சலூன் கடை வைத்திருப்பது படத்தில் பெரிய பங்காக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது எதுவும் இல்லை. ஒரு முக்கியமான கதை திருப்பத்திற்காக மட்டுமே அவர் முடி திருத்தும் ஒருவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறார். விஜய் சேதுபதியின் நடிப்பைத் தவிர்த்து மகாராஜா கேரக்ட்ரை தனித்துவமாக நாம் நினைவில் வைத்திருக்க எழுத்தில் போதுமான பலம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் செண்டிமெண்ட் மாதிரி இயக்குநருக்கு பாரதிராஜா செண்டிமெண்ட்போல. அதான் இரண்டே காட்சிகளில் மட்டும் வரும் ஒரு கேரக்டரை அவருக்கு கொடுத்து வைத்திருக்கிறார்.
அனுராக் கஷ்யபின் நடிப்பு வில்லனாக நம்ப வைத்தாலும், இந்த கதாபாத்திரத்தை எந்த நடிகர் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம், பி.டி வாத்தியாராக சும்மா வரும் மம்தா மோகன்தாஸ் , சில காட்சிகளில் அபிராமி என முழுமைபெறாத குறைகள். நடராஜன் நடித்திருக்கும் போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் தருணம் ஒரு நல்ல சர்ப்ரைஸாக இருக்கும்
பின்னணி இசை
ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் பின்னணி இசையில் படத்தை வேகத்தை இசையால் கூட்டுகிறார் அஜ்னீஷ் லோக்நாத்.
ஒரு சாதாரண திரை ரசிகனுக்கு மகாராஜா படம் நிச்சயமாக கொடுத்த காசுக்கு நேர்மையான படமாக நிச்சயம் இருக்கும். ஆனால் வலியை சொல்லும் கதையைப் பார்த்த உணர்வு இருக்குமா என்றால் அது இல்லைதான்