மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் இளைஞர் உயிரிழப்பு? - மறியலில் இறங்கிய உறவினர்கள்
மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்ததால் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி ஏராளமான பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி இளைஞரின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராய விற்பனை
மயிலாடுதுறை அருகே கடுவங்குடி பகுதியில் பல மாதங்களாக தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறை அதிகாரிகள் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த இளைஞர்
இதன் இடையே கடந்த வாரம் கடுவங்குடி சிவன் கோயில் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பரின் 32 வயதான மகன் பாலாஜி என்பவர் தொடர்ச்சியாக அப்பகுதி விற்பனை ஆகும் கள்ளச் சாராயத்தை வாங்கி அருந்தி வந்துள்ளார். பின்னர் அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் மே 23 ஆம் தேதி அன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாலைமறியல் போராட்டம்
இந்த நிலையில் அந்த பகுதியில் விற்பனை ஆகும் கள்ளச் சாராயம் குடித்ததால் தான் தங்கள் மகன் பாலாஜி உயிரிழந்ததாக கூறி அவரின் பெற்றோர் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் கடுவங்குடி பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்கள் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் இரு பெண்களை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
உறுதியளித்த காவல்துறை
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதனை ஏற்ற சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை மணல்மேடு பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.