Esha Deol : மணி சார் ஒரு மேஜிக்.. அஜய் தேவ்கனுக்கு எதுவுமே புரியாது... ஆயுத எழுத்து அனுபவம் பகிர்ந்த ஈஷா
Esha Deol : மணிரத்னத்தின் ஆயுத எழுத்து மற்றும் யுவா படங்கள் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் த்ரோபேக் புகைப்படத்துடன் அனுபவம் பகிர்ந்த நடிகை ஈஷா தியோல்.
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குநராக தனக்கென ஒரு தனி அந்தஸ்தை பிடித்துள்ளவர் இயக்குநர் மணிரத்னம். அவரின் அற்புதமான படைப்புகளில் ஒன்று 2004ம் ஆண்டு தமிழில் 'ஆயுத எழுத்து' மற்றும் இந்தியில் 'யுவா' என்ற தலைப்பிலும் ஒரே நேரத்தில் உருவாகி வெளியான திரைப்படம்.
தமிழில் சூர்யா, சித்தார்த், திரிஷா, மாதவன், மீரா ஜாஸ்மீன் உள்ளிட்டோர் நடிக்க இந்தி வர்ஷனில் அஜய்தேவ்கன், அபிஷேக் பச்சன், கரீனா கபூர், ராணி முகர்ஜி, விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த இரு மொழிகளிலும் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஈஷா தியோல். தமிழில் சூர்யாவின் ஜோடியாகவும் இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாகவும் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்த நிலையில் நடிகை ஈஷா தியோல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் த்ரோபேக் புகைப்படங்களை பகிர்ந்து அப்படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து பதிவு ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார்.
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் பழம்பெரும் நடிகை ஹேமாமாலினி. அவரின் மகள் ஈஷா தியோல் 'ஆயுத எழுத்து' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்த பதிவில் "யுவா & ஆயுத எழுத்து படங்கள் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. மணி சார் ஒரு மேஜிக். தமிழ் மற்றும் இந்தி இரு மொழிகளிலும் உங்களுடன் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. என்னுடைய கனவு நனவானது. உங்கள் இயக்கத்தில் நடித்தது ஒரு கலைஞனாக திருப்தியாக இருந்தது. அஜய் தேவ்கன், சூர்யா இருவருடனும் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அது தான் அஜய்யுடன் இணைந்து நடித்த முதல் படம் என நினைக்கிறேன். மணி சாரும் நானும் காட்சி குறித்து எப்போதும் தமிழில் தான் பேசி கொள்வோம். அதை பார்த்து அஜய் என்ன தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என ஆச்சரியமாக பார்ப்பார்.
View this post on Instagram
சூர்யா பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார். கேமரா முன்னால் சென்றுவிட்டால் இருவருமே அவரவர்களின் காட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு விடுவோம்.
மூன்றாவதாக பகிர்ந்து இருப்பது 2004ம் ஆண்டு சிங்கப்பூரில் ஐஃபாவில் நடைபெற்ற யுவாவின் பிரீமியர் காட்சி. அதில் நானும் ஒரு பகுதியாக இருந்தேன் என்பதை நினைக்கையில் பெருமிதமாக உள்ளது.
இந்த அருமையான இரண்டு படங்கள் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என பதிவிட்டு இருந்தார் இஷா தியோல்.