சீர்காழியில் தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு
சீர்காழி நகராட்சி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தரமாக இல்லை என கூறி பணிகளை குடியிருப்பு வாசிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சீர்காழி நகராட்சி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தரமாக இல்லை என கூறி பணிகளை குடியிருப்பு வாசிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நகராட்சி நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு சீர்காழி வாழ் நகர மக்கள் தொடர்ந்து நகராட்சி மீது வைத்து வருகின்றனர். மேலும் நகராட்சி வார்டு உறுப்பினர்களும், அவர் அவர் வார்டுக்கான தேவைகளை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றி செய்து தருவதில்லை எனவும் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு தாடாளன் கோயில் ஆசிரியர் நகர், கோனார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை உரிய தடிமன் அளவீடு இல்லாமலும், தரமாகவும் அமைக்கப்படவில்லை எனவும், சிமெண்ட் சாலை அமைத்த பின் சாலை செட் ஆகும் வரை அவ்வழியாக இரு சக்கர வாகனங்கள் பொதுமக்கள் நடந்து செல்லாதவாறு கயிறு கட்டி அதை முறைபடுத்த தவறியதால் சாலைகள் இருசக்கர வாகனங்கள் சென்று சேதம் அடைந்ததாகவும் கூறி இன்று மேற்கொண்டு நடைபெற இருந்த சாலைப் பணிகளை அப்பகுதி பெண்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தடுத்து நிறுத்தினர்.
மேலும், சேதம் அடைந்த சாலையை சீரமைத்துவிட்டு மேற்கொண்டு சாலை அமைக்கும் பணிகளை தரமாக தொடர வேண்டும் என சாலை பணியில் ஈடுபட வந்த ஊழியர்களிடம் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்றுள்ளார். இதனால் மேற்கொண்டு சாலை பணியை முழுமையாக முடிக்காத சூழல் நிலவிவகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் முன்பெல்லாம் ஒப்பந்ததாரர்கள் பலருக்கும் கமிஷன் கொடுத்து விட்டு அதில் அவர் லாபம் சம்பாதிக்கும் விதமாக தரமட்ட சாலைகளை அமைப்பார்கள்.
ஆனால் தற்போதயெல்லாம் பொதுமக்கள் ஓரளவு விழித்துக் கொண்டு கேள்வி கேட்க முன்வந்துள்ளதால் ஒப்பந்ததாரர்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்று அனைத்து பகுதிகளிலும் மக்கள் முன் வர வேண்டும் என்றும், அவ்வாறு முன் வந்தால் அரசு சார்ந்த வேலைகள் தரமானதாக இருக்கும் என தெரிவித்தார்.