மயிலாடுதுறையில் சோகம்: பள்ளி வேன் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் விபத்துக்குள்ளனதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாரில் உள்ள தனியார் பள்ளிக்கு திருக்கடையூரில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக, வேனில் பயணித்த 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் திருக்கடையூரை சேர்ந்த 15 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாள்தோறும் சென்று கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் சென்று வர பெற்றோர்கள் தங்களின் சொந்த ஏற்பாட்டில் வேன் ஒன்றை ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று, திருக்கடையூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பொறையாரில் உள்ள தனியார் பள்ளிக்கு புறப்பட்ட அந்த தனியார் வேன், அனந்தமங்கலம் மெயின் ரோடு, என்.என் சாவடி பகுதிக்கு வந்தபோது வேகமாக சென்றுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் மோதி, "யு-டர்ன்" அடித்து திரும்பியுள்ளது. அதே சமயம், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பொறையார் சர்ச் தெருவைச் சேர்ந்த ராஜா (பெயிண்டர்) மற்றும் அவரது உதவியாளர் காபீரியல் மீது வேன் பயங்கரமாக மோதியது.
ராஜா உயிரிழப்பு, காபீரியல் படுகாயம்
இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா, முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த காபீரியல், 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
விபத்து நடந்தபோது வேனில் இருந்த 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெரும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். இது பெற்றோர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், இந்த சம்பவம் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையினர் விசாரணை தீவிரம்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பொறையார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர், விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கான காரணம் மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவு குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி
இந்த சம்பவம், தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் பொறுப்புணர்வு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது. பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா, ஓட்டுநர்கள் திறமையானவர்களா என்பது போன்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளன. இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






















