எஸ்.பி-க்கு எதிராக நீதிமன்ற வாயில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் - எங்கே? ஏன் தெரியுமா...?
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக நீதிமன்ற வாயில் வழக்கறிஞர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக நீதிமன்ற வாயில் வழக்கறிஞர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கறிஞர் சங்கமித்திரன்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கப்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்திரன். இவர் நாம் மக்கள் என்ற இயக்கத்தின் தலைவராக உள்ளார். மேலும் இவர் சமூக ஆர்வலராக செயல்பட்டு பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார். இதனால் இவருக்கு பல தரப்பில் இருந்தும் ஆபத்து நிலவிவருகிறது.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து முறையான விசாரணையை காவல்துறை மேற்கொள்ளவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு பாலியல் குற்றவழக்குகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு அளித்திருந்தார்.
வழக்கறிஞருக்கு சம்மன்
இந்த சூழலில் அந்த பாலியல் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சங்கமித்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் சங்கமித்திரன் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். உரிய நீதி கிடைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடர போவதாகவும், மயிலாடுதுறையில் நடந்து கூட்டுபாலியன் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும், வழக்கு வாரண்டில் இருக்கும் வக்கீலுக்கு அரசு வக்கீலாக பொறுப்பு கொடுத்திரக்கிறார்கள். பாலியல் குற்றவழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்ததற்கான என்மீது பொய்வழக்கு பதிவு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உளவுப்பிரிவு காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.
போராட்டம் வாபஸ்
இதனால் மயிலாடுதுறை நீதி மன்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 10 மணிநேரம் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து வழக்கறிஞர் சங்க செயலர் வழக்கறிஞர் பிரபு , வழக்கறிஞர் குபேந்திரன், வழக்கறிஞர் புகழரசன் ஆகியோர் கேட்டு கொண்டதற்கு இணங்க போராட்டத்தை அவர் வாபஸ் பெற்றார். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் சங்கமித்திரனின் பிரச்சினை குறித்தும், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க, அவருக்கு துணை நிற்கும் என கூறிய உத்தரவாதத்தம் அளித்தன் பேரில் போராட்டமானது வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
இந்நிலையில் அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த போராட்டத்தை தடுக்கவோ, அல்லது பாதுகாப்பிற்கு கூட ஒரு காவலரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவில்லை என சமூக ஆர்வலர்கள் பலரும் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். முதல் நாள் இரவு சம்மன் கொடுக்க வழக்குரைஞர் சங்கமித்திரன் வீட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தாகவும், மறுநாள் உண்ணாவிரதம் இருக்கும் போது ஏன் வரவில்லை? எனவும் வழக்கறிஞர் சங்கமித்திரன் மீது எப்.ஐ.ஆர் எண் 646/2024 இல்
பிரிவுகள் 221 - சட்டப் பூர்வ அச்சத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை, 351 (2) - கிரிமினல் மிரட்டல்.
356 - அவதூறு, 132 - அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் 03.12.24 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும், அப்படி இருந்தும் காவல்துறை அவரை ஏன் நேற்று கைது செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர், வழக்கறிஞர் சங்கமித்திரன் மீது சென்னை மற்றும் புதுச்சேரியில் பார் கவுன்சிலில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் தலைமை பார்கவுன்சிலுக்கு புகார் அளிக்கும் முன், மயிலாடுதுறையில் உள்ள வழக்கறிஞர் பார் கவுன்சிலுக்கோ அல்லது நீதி விசாரணை குழுமத்திற்கோ தெரிவிக்காதது ஏன்? வழக்கறிஞர் சங்கமித்திரன் குறித்து தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்று புகார் அளித்து, அவரை முடக்கி விட வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயல்படும் அளவுக்கு அவர் செய்தது குற்றங்களா? அல்லது மக்கள் போராட்டங்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.