“நான்தான் பறக்கும் படை அதிகாரி”; கல்லூரிக்குள் புகுந்த இளைஞரை மடக்கி பிடித்த ஆசிரியர்கள்
சீர்காழி அருகே புத்தூர் அரசு கலைக் கல்லூரிக்குள் புகுந்து ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரியை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சீர்காழி அடுத்த புத்தூரில் செயல்பட்டு வரும் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் பறக்கும் படை அதிகாரி என கூறி இளைஞர் ஒருவர் ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்புகளில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பிற்கான தேர்வு கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
கல்லூரிக்குள் நுழைந்த இளைஞர்
இந்த சூழலில் பிபிஏ, பிஏ தமிழ் மற்றும் ஆங்கில இளங்கலை பட்ட படிப்பில் படித்து வரும் மாணவர்களுக்கு நேற்று மாலை தேர்வு நடைபெற்றுள்ளது. இத்தேர்வினை சுமார் 300 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அப்போது கல்லூரிக்குள் ஒரு நபர் புகுந்து முதல்வர் அறைக்கு சென்று, நான் பறக்கும் படை அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து மாணவர் தேர்வு எழுதுவதை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதனை அடுத்து அங்குள்ளவர்கள் ஆய்வு செய்யுங்கள் என்று தெரிவித்தனர். உடனடியாக என்னுடன் தொடர்ந்து வாருங்கள் என்று ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று தேர்வு எழுதும் மாணவர்களை ஆய்வு செய்தார்.
விசாரணையில் சிக்கிய போலி அதிகாரி
பின்னர் பேராசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறைக்கு வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்தார். இந்த நபரை அங்குள்ள ஆசிரியர்கள் வரவேற்று காபி மற்றும் இனிப்புகளையும் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரை கல்லூரி பொறுப்பு முதல்வர் முரளி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அவர் குறித்து விபரம் கேட்டுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்க அந்த நபர் போலி அதிகாரி என்பதை தெரிந்து கொண்டனர். உடனடியாக அங்கிருந்த தேர்வு கட்டுப்பட்டு அலுவலர் குமார் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் சேர்ந்து பிடித்து அறைக்குள்ளேயே தங்க வைத்தனர்.
கைது செய்த காவல்துறையினர்
மேலும் இதுகுறித்து ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரை அடுத்து கல்லூரிக்கு விரைந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் அருண்குமார், சிறப்பு ஆய்வாளர் கண்ணன் மற்றும் காவல்துறையினர் வந்து விசாரித்தபோது, அவர் கொள்ளிடம் அருகே காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் 27 வயதான மகன் பார்த்திபன் என்பதும், ஆங்கிலம் முதுகலை பட்டப்படிப்பு படித்துவர் என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இவர் ஏன் இப்படி போலி பறக்கும்படை அதிகாரியாக கல்லூரிகள் புகுந்தார். இதன் பின்னணி என்ன என்று பல கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி அறைக்குள் புகுந்த போலி தேர்தல் பறக்கும் படை அதிகாரியால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.