இது புதுசா இருக்குண்ணே..! காய்கறி கூடைகளைக் கொண்டு சாலையை மறித்த திமுக - என்ன நடந்தது..?
மயிலாடுதுறையில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக முக்கிய வீதியின் சாலையை திமுகவினர் மறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்த திமுகவினர் வாகனங்களை நிறுத்துவதற்காக, மயிலாடுதுறையில் நகரின் முக்கிய கடைவீதியில் தற்காலிக தடுப்புகளை வைத்து காவல்துறை உதவியுடன் தடைகளை ஏற்படுத்திய திமுகவினரால் கடைவீதிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்ற நிகழ்வு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மகாதான வீதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் சமத்துவ நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணொளி காட்சி வாயிலாக சென்னையில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக திமுகவினர் சொகுசு வாகனங்களில் அணிவகுத்து வந்திருந்தனர்.
Minister Ponmudi: அமைச்சர் பதவிக்கும் ஆப்பா?- பொன்முடியை நீக்கக் கோரி ஆளுநரிடம் முறையீடு

காய்கறி கடைகளால் தடுப்பு
இந்நிலையில் அவர்கள் வந்த வாகனங்களை நிறுத்துவதற்காக முக்கிய கடைவீதியான மகாதான வீதியில் ஒரு பகுதியை திமுகவினர் தற்காலிக தடுப்புகள் அமைத்து மூடிவிட்டனர். சாலையின் அருகே இருந்த ஒரு காய்கறி கடையின் காய்கறி அடுக்கும் பிளாஸ்டிக் கூடைகளை வரிசையாக அடுக்கி வைத்து சாலையில் பொதுமக்கள் வாகனம் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தியதுடன், மீறி செல்பவர்களை தடுக்கும் வகையில் காவலர் ஒருவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட வைத்தனர்.
பள்ளிகளில் நீளும் வன்முறைகள்; நீதிபோதனை, விளையாட்டு பாடவேளைகளை அதிகரிக்கக் கோரிக்கை!

வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல்
காவலரும் கண்ணும் கருத்துமாக இருசக்கர வாகனத்தில் வந்த பொதுமக்கள் எவரையும் அப்பகுதிக்கு உள்ளே செல்லாதவர் மிரட்டி அனுப்பி வைத்தார். முக்கிய பண்டிகை நாளான தமிழ் புத்தாண்டு தினத்தில் முக்கிய கடைவீதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு திமுகவினர் மேற்கொண்ட நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிருப்தி
மேலும் சிலர் கூறுகையில், திமுகவினர் வேண்டும் என்றே தமிழ் புத்தாண்டை உதாசீனம் செய்யும் செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அளித்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக திமுகவினர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.






















