காலாவதியாகாத சாக்லேட்டில் உயிருடன் இருந்த பூச்சிகள் - சாப்பிட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு
காலாவதியாகாத சாக்லேட்டில் பூச்சிகள் ஊர்ந்து சென்ற நிகழ்வு மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன் - ஆர்த்தி. இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி 5-ம் தேதி உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளனர். அப்போது மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் உள்ள பிரபல தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கியுள்ளனர். அதில் சாக்லேட் பாக்ஸ் இரண்டு வாங்கி உள்ளனர். ஒரு பாக்ஸில் 25 சாக்லேட்கள் வீதம் இருந்துள்ளது.
சாக்லேட் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி
அதனை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார் ஆர்த்தி. அங்கிருந்த குழந்தைகளுக்காக ஒரு சாக்லேட் பாக்ஸை கொடுத்து விட்டு மற்றொரு பாக்ஸை தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கொடுக்க வைத்துக் கொண்டு தம்பதியினர் திருமீயச்சூருக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் ஆர்த்தியின் தாயார் ஆர்த்திக்கு போன் செய்து பிள்ளைகளுக்கு சாக்லேட் கொடுக்க வேண்டாம் எனவும், அதில் பூச்சிகள் உயிருடன் இருந்ததாகவும், அதனை சாப்பிட்டு குழந்தைகள் வாந்தி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சாக்லேட்டில் இருந்த பூச்சிகள்
அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி அவர்களிடம் இருந்த மற்றொரு சாக்லேட் பாக்ஸை பிரித்து பார்த்துள்ளனர். அந்த சாக்லேட் பாக்ஸ் இருந்த சாக்லேட்டிலும் பூச்சிகள் உயிருடன் ஊர்ந்து சென்றுள்ளது. ஆனால் அந்த சாக்லேட் பாக்ஸில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 13 -ம் தேதி தயாரிக்கப்பட்ட சாக்லெட் எனவும், காலாவதியாகும் தேதி 12.06.2025 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காலாவதியாகாத சாக்லேட்டில் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்ததுள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறையிடம் புகார்
பின்னர் மீண்டும் மயிலாடுதுறை வந்த தம்பதியினர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். நிறுவனத்திற்கு வந்த மயிலாடுதுறை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்டார். மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அதே நிறுவத்தின் மற்ற சாக்லெட்டில் பிரித்தாலும் அதில் இருந்து பூச்சி உள்ளதாக குற்றம்சாட்டி பிரித்து பூச்சியை காண்பித்தனர்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தொடரும் இது தொடர்பாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள சாக்லேட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாகவும், சாக்லேட்டை கோயமுத்தூரில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாகவும் முடிவுகளின் அடிப்படையில் சாக்லேட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த சாக்லேட் வாங்கிய சூப்பர் மார்க்கெட்டில் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாகவும் தம்பதியர் குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.
உணவுத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவர்களாக சென்று உணவு தரம், காலாவதி தேதி உள்ளிட்ட எந்த ஒரு ஆய்வினையும் கடைகளிலும், நிறுவனங்களிலும், ஹோட்டல்களிலும் செய்வது இல்லை எனவும், இதுபோன்று புகார்கள் எழும் சமயத்தில் மட்டுமே அவர்கள் சென்று ஆய்வு செய்வதாகவும். அந்த ஆய்வும் பெயரளவில் மட்டுமே மேற்கொண்டு, குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நிறுவனங்களுக்கு சாதகம் செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டு குறித்து அரசு உரிய விசாரணை செய்து, உணவுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டும் எனவும், அப்போதுதான் உணவுத்துறை சார்ந்த தொடர் பிரச்சினைகளை ஓரளவாவது குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.