முதல்வர் திறந்து வைத்த கல்லூரி வகுப்பறை கட்டிடம் - இரண்டு வாரங்கள் கூடத் தாக்குப்பிடிக்காத அவலம்..
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடில் முதல்வர் திறந்து வைத்த அரசு கல்லூரி வகுப்பறை கட்டிடம் இரண்டு வாரங்கள் கூடத் தாக்குப்பிடிக்காமல் மழைநீர் ஒழுகுவது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரூ. 2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்த 15 நாட்களுக்குள் மழைநீர் ஒழுகும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் கரங்களால் திறப்பு விழா கண்ட கல்லூரி வகுப்பறை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் செயல்பட்டு வருகிறது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் சுற்றுவட்டார கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழை எளிய விவசாய குடும்பங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஆறு கூடுதல் வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டன.
இந்த வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் நவம்பர் 20-ஆம் தேதி அன்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இந்தக் கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை: தமிழக முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்த கல்லூரி வகுப்பறைகள்..15 தினங்களில் மழை நீர் ஒழுகும் அவலம். pic.twitter.com/gi993n4ZiR
— JAGANNATHAN (@Jaganathan_JPM) December 3, 2025">
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கசிவு காட்சிகள்
கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு சரியாக 13 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக, புதிதாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் பெரும் குறைபாடு வெளிப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகுவது போன்ற காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன. வைரலாகும் அந்தக் காட்சிகளில், புதிய வகுப்பறைகளின் சுவர்கள் முழுவதும் ஈரப்பசையுடன் காட்சியளிப்பதும், சில இடங்களில் நீர் வடிந்து தரையில் தேங்குவதும் தெளிவாகத் தெரிகிறது.
தரமற்ற கல்லூரி கட்டுமானமா?
"ரூ. 2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம், திறந்து வைத்து இரண்டு வாரங்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் இவ்வாறு ஒழுகுவது தரமற்ற கட்டுமானத்திற்கு அப்பட்டமான சான்று" என்று பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தரமற்ற முறையில் கட்டிடம் கட்டப்பட்ட காரணத்தால், இந்த மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் கட்டிடம் விரைவிலேயே பலமிழந்து சில ஆண்டுகளில் இடிந்து விழும் ஆபத்து உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கை
இத்தகைய அவசர கதியில் திறக்கப்பட்ட தரமற்ற கட்டிடத்தால், மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள், "மாணவச் செல்வங்களின் எதிர்காலம் தொடர்பான கல்வி நிறுவனக் கட்டிடத்தில் இதுபோன்ற தரக்குறைபாடு நிகழ்ந்திருப்பது வருந்தத்தக்கது. இந்தக் கட்டிடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமானப் பணிகளைச் சரிவரக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ள இப்புதிய கட்டிடத்தை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்து, உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும்" என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள இந்தக் காட்சிகள், அரசு கட்டுமானங்களின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















