தீயில் விழுந்த பெண்! சாதுர்யமாக காப்பாற்றிய பக்தர்கள் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆதிமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பெண் பக்தர் ஒருவர் தீக்குண்டத்தில் தடுமாறி விழச்சென்ற நிலையில் நொடிப்பொழுதில் அங்கிருந்தவர்கள் பெண்மணியை காப்பாற்றினர்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆதிமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பெண் பக்தர் ஒருவர் தீக்குண்டத்தில் நிலைத்தடுமாறி விழுந்த நிலையில் நொடிப்பொழுதில் சாதுர்யமாக செயல்பட்டு அங்கிருந்தவர்கள் பெண்மணியை காப்பாற்றியுள்ளனர்.
பிரசித்தி பெற்ற ஆதிமாரியம்மன் திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் கவரத்தெருவில் அமைந்துள்ளது பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிமாரியம்மன் திருக்கோயில். இவ்வாலயத்தின் ஆண்டு தீமிதி உற்சவம் கடந்த மாதம் மே 30 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்பாள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.
தீமிதி உற்சவம்
விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் தீமிதி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள் காவிரி கரையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் முன்னே செல்ல ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்திகரம் சுமந்துவந்தவர் முதலில் தீகுண்டத்தில் இறங்க, அதனை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக மற்ற பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தீக்குண்டத்தில் தவறி விழந்த பெண்மணி
அப்போது பெண் பக்தர் ஒருவர் தீமிதித்த போது எதிர்பாராத விதமாக தீக்குண்டத்தில் தடுமாறி விழசென்ற நிலையில் அங்கிருந்த மற்ற பக்தர்கள் சாதுரியமாக செயல்பட்டு அந்த பெண்மணியை காப்பாற்றினர். இதனால் அவர் ஆபத்து ஏதும் இன்றி தப்பினார். இச்சம்பவம் அங்கிருந்த பக்தர்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தீமிதி உற்சவம் சிறப்பாக நிறைவுற்ற நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.






















