அந்த சமூகத்தில் பிறந்த என்னை உயர்கல்வி துறை அமைச்சர் ஆக்கியவர் முதல்வர் - கோவி.செழியன் நெகிழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் தமிழ்நாடு அமைச்சர் பார்வையிட்டு, தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

எந்த ஜாதிக்கு கல்வி இல்லை என்று சொன்னார்களோ, எந்த ஜாதியில் கல்வி ஓசை காதில் கேட்டால் ஈயத்தை ஊற்ற சொன்னார்களோ, அந்த சமூகத்தில் பிறந்த என்னை உயர்கல்வி துறை அமைச்சர் ஆக்கியவர் முதல்வர் என கோவி.செழியன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர்.
மக்களுடன் முதல்வர் முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைகாரசத்திரம், திருமுல்லைவாசல், பெருந்தோட்டம், இராதாநல்லூர், ஆகிய வருவாய் கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர்.கோவி செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டு, முகாமில் உடனடி தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களுக்குரிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் அருள்ஜோதி உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேச்சு
திமுக சார்பில் இராதாநல்லூரில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கும் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ”ஓலை குடிசையில் பிறந்த ஏழை தொண்டன் என்னை திருவிடைமருதூர் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக்கி தற்போது அமைச்சராக்கியவர் முதல்வர். எந்த சாதிக்கு கல்வி இல்லை சொன்னார்களோ, படிக்க கூடாது என்றார்களோ, எந்த சாதியில் பிறந்தவர் பள்ளி கூடம் செல்லக்கூடாது என்றார்களோ, அவனுக்கு, அவன் சமூகத்திற்கு எந்த காலத்தில் கல்வி தோன்றியது ஆனால் எனது தாத்தா பாட்டி கையெழுத்து போடமாட்டார்கள், எனது அப்பா அம்மா கிருக்கிகிருக்கி கையெழுத்து போடுவார்கள், நான் தான் தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாக கையெழுத்து போடுவேன், இதைத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகம். தலைவர் கலைஞர் இல்லை என்றால் நமது பெயருக்கு பின்னால் பிஏ., பிஎஸ்சி., பி.காம்., எம்ஏ, எம்எஸ்சி., எம்.காம் பட்டங்கள் இன்றைக்கு உள்ளது.

பெயருக்கு பின்னால் பட்டங்கள்
ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பெயருக்கு முன்னால் பிஏ., பிஎஸ்சி., பி.காம்., எம்ஏ, எம்எஸ்சி., எம்.காம் பட்டங்கள் உண்டா? இதை தந்தது திமுக இயக்கம், அண்ணா, கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின், இவற்றை காட்டி காக்க இருக்கும் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு காலத்தில் எந்த சாதியில் பிறந்தால் படிக்க கூடாது என்று சொன்னார்களோ அந்த சாதியில் பிறந்த எனக்கு, எந்த சாதிக்கு கல்வி இல்லை என்று சொன்னார்களோ,எந்த சாதியில் கல்வி ஓசை காதில் கேட்டால் ஈயத்தை ஊற்ற சொன்னார்களோ, அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஓலை குடிசையில் பிறந்த ஏழை தொண்டனை, என்னை தமிழக அரசின் உயர்கல்வி துறை அமைச்சர் ஆக்கியவர் முதல்வர், நான் சொல்வது இந்த ஒரு கோவி.செழியனை மட்டும் அல்ல ஓராயிரம் கோவி.செழியனை உருவாக்கும் ஆற்றல் தமிழக முதல்வருக்கும், அண்ணன் உதயநிதிக்கும் உண்டு” என நெகிழ்ச்சியுடன் பேச்சினார்.























