மாரடைப்பின் 'பொன்னான நேரம்' (Golden Hour) இனி வீணாகாது! சீர்காழியில் ஓர் முன்மாதிரி திட்டம்..!
மாரடைப்புக்கு முதல் உதவியாக உயிர்காக்கும் 'லோடிங் டோஸ்' மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை சீர்காழியில் 'விழுதுகள் இயக்கம்' சார்பில் தொடங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை: மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை தலைமையிடமாகக் கொண்ட 'விழுதுகள் இயக்கம்' (Vazhudugal Iyakkam), ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தமிழகத்திற்கே முன்மாதிரியான திட்டத்தைத் துவக்கி உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய 'முதல் உதவி மாத்திரைகள்' (Loading Dose) அடங்கிய பெட்டகத்தை விலையில்லாமல் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா சீர்காழியில் சிறப்பாக நடைபெற்றது. மாரடைப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்குச் செல்லும் வரையிலான பொன்னான நேரத்தில் (Golden Hour) கொடுக்கப்படும் இந்த மாத்திரைகள், பல உயிர்களைக் காக்கும் என்ற நம்பிக்கையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துவக்க விழா நிகழ்வு
இந்தச் சிறப்புமிகு திட்டத்தின் துவக்க விழா, கடந்த சீர்காழியில் உள்ள குமார் மருத்துவமனையில் நடைபெற்றது. விழுதுகள் இயக்கத்தின் தலைவர், பொறியாளர். A.K. ஷரவணன், தமிழகத்தில் முதன்முறையாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
விழாவிற்கு மருத்துவமனையின் தலைவர் மருத்துவர். P.முத்துக்குமார், தலைமை வகித்தார். அவர் பேசுகையில், “விழுதுகள் இயக்கத்தின் இந்த முயற்சி, ஒரு சாதாரணச் சேவை அல்ல, இது பல குடும்பங்களைக் காக்கவல்ல ஒரு மகத்தான அறிவியல் அடிப்படையிலான சேவை. மாரடைப்பின் போது தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் அபாயகரமானது. இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தற்காலிகமாகத் தடுத்து, நோயாளிக்கு மருத்துவமனைக்குச் செல்ல கூடுதல் நேரத்தை இந்த மாத்திரைகள் வழங்குகின்றன" என்று பாராட்டினார்.
இதய நோய் நிபுணர்களின் கருத்து
'விலையில்லா முதல் உதவி மாத்திரைகள் வழங்கும் திட்டம்' சென்னை பில்ராத் மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவர் U.இளையராஜா M.D (Cardiology) முறைப்படி துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மாரடைப்பு என்பது ஒரு அவசர நிலை. மருத்துவத் துறையில், மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரம் 'பொன்னான நேரம்' (Golden Hour) என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், இரத்தத்தை மெலிதாக்கும் மற்றும் அடைப்பை நீக்கும் '
* ஆஸ்பிரின் (Aspirin ) or டிஸ்பிரின் Disprin tablet,
* கிளோபிடொகிரல் Clopidogrel tablets
* அடோர்வாஸ்டாடின் Atorvastatin tablet போன்ற குறிப்பிட்ட மாத்திரைகள் 'லோடிங் டோஸ்' என்ற அளவில் நோயாளிக்கு வழங்கப்பட்டால், அது உயிரிழப்புக்கான வாய்ப்பை 30 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. விழுதுகள் இயக்கம், இந்த முக்கியமான மருத்துவ நடைமுறையைச் சமூகச் சேவையாக எடுத்துச் செல்வது உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என்று குறிப்பிட்டார்.
'விழுதுகள் இயக்கத்தின்' சமூக நோக்கு
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சமூக சேவை மற்றும் பேரிடர் கால உதவிகளில் முனைப்புடன் செயல்பட்டு வரும் 'விழுதுகள் இயக்கம்', பொதுமக்களின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்தத் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
"மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு பரவலாக இருந்தாலும், முதல் உதவிக்குத் தேவையான மாத்திரைகள் உடனடியாகக் கிடைப்பதில்லை. இந்தக் குறைபாட்டைக் களையவே விழுதுகள் இயக்கம் இந்த முன்மாதிரித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது" என்று இயக்கத்தின் தலைவர் பொறியாளர். A.K. ஷரவணன் தெரிவித்தார். "முதற்கட்டமாக, மாவட்டத்தின் முக்கியப் பொது இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பிரதானக் கடைவீதிகள், எனப் போக்குவரத்து நிறைந்த 100 இடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் விரைவில் இந்த மாத்திரைகள் அடங்கிய பிரத்யேக முதலுதவிப் பெட்டகங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், உள்ளூர்ச் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாரடைப்பின் அறிகுறிகள் குறித்தும், இந்த மாத்திரைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது" என்றும் அவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை அவசியம்
மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், மாரடைப்பின்போது நெஞ்சில் வலி, இடது கைக்கு வலி பரவுதல், வியர்த்துக் கொட்டுதல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக இந்த மாத்திரைகளை (உரியவரின் அனுமதியுடன்) பயன்படுத்தலாம் என்றும், இருப்பினும், மாத்திரைகளை எடுத்துக் கொண்ட உடனேயே தாமதமின்றி அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்வது கட்டாயமாகும் என்றும் வலியுறுத்தினர்.
மாரடைப்புக்கான முதலுதவி மாத்திரைகளை விலையில்லாமல் வழங்குவதன் மூலம், விழுதுகள் இயக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ அவசர காலங்களில் மனித உயிர்களைப் பாதுகாப்பதில் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. இந்தச் சிறப்பு மிக்க முன்மாதிரித் திட்ட துவக்க விழாவில் பலரும் கலந்துகொண்டு, இயக்கத்தின் முயற்சிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விழுதுகள் இயக்கம் - (தொடர்புக்கு: செல் 9865489235)






















