TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 , 2, 2ஏ, 4 தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்; எங்கே, எப்போது, பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching 2025: டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி வகுப்புகள் சென்னையில் தொடங்க உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 , 2, 2 a, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இயங்கி வரும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் நவம்பர் 2-ம் தேதி முதல் பயிற்சி கட்டணம் ஏதும் இல்லாமல் பயிற்சி வகுப்புகளை தொடங்குகிறது.
எதிர்வரும் 2026-ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வு கால அட்டவணையை (Annual Planner) தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. TNPSC-யின் பாடத்திட்டங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு விடையளிக்கும் வகையில் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
இந்த பயிற்சி வகுப்பை தொடங்குவது குறித்து சென்னை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
TNPSC அடுத்தடுத்து வெளியிட இருக்கும் அறிவிக்கைகளில் அறிவிக்கவிருக்கும் தேர்வுகளுக்கு டாக்டர். அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் முன்கூட்டியே வகுப்புக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. புதிதாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது போட்டியிடும் தகுதியை உயர்த்திக் கொண்டு வெற்றிபெற முன்வர வேண்டும்.
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நுட்பமாக ஆராய்வதுடன் பொதுநிகழ்வுகளுடன் இணைத்து பார்த்து விடைகளை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள் தனது கற்றலின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தன்னை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான திட்டத்துடன் வகுப்புகளில் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியை அளிக்க உள்ளோம்.
மாணவர்கள் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு வழிகாட்டியாக இந்திய ஆயுள் மற்றும் பொதுக்காப்பீட்டின் ஊழியர்களை உள்ளடக்கிய அகில இந்திய இன்ஷியுரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் பயிற்சி வகுப்புகளை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
1300-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசுப்பணி
மேலும் வங்கி, மற்றும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களும் மாணவர்களுடன் இணைந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவுகளை நிறைவேற்றி வருகின்றனர். இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் இணைந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறைகளில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கு அறிவிப்பு வரும்போது, மாணவர்கள் அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே TNPSC-யின் குரூப் 1, 2, 2ஏ, மற்றும் 4 பிரிவுகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு வகுப்புகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளன.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.
எங்கே? எப்போது?
சென்னை-1 பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து (கச்சாலீஸ்வரர் ஆலயம்) அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் அமைந்துள்ள இக்கல்வி மையத்தில் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்பு நடைபெறும். தேர்வெழுத தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
பங்கேற்பது எப்படி?
மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், மற்றும் குடியிருப்பு முகவரிக்கான ஆதார நகலுடன் வர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு - 97906 10961, 97912 85693, 73387 03324, 90426 92613, 90427 27276, 94446 41712.
ஆண்டு முழுவதும் கட்டணம் இல்லாமல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் நேரடியாகவும் அணுகி கூடுதல் விவரங்களை பெறலாம் என்று அம்பேத்கர் கல்வி மையம் தெரிவித்துள்ளது.






















