தமிழக அரசு மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க கூடாது - பிரேமலதா விஜயகாந்த்...!
மத்திய அரசு நிதி தரவில்லை என்று பழி போட்டு தப்பிக்காமல், வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, மத்திய அரசு நிதி தரவில்லை என்று பழி போட்டு தப்பிக்காமல், வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர்பாதிப்புகளை பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பருவம் தவறிய மழை பொழிவு:
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் ஜனவரி 18 அன்று 22 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிப்படைந்தது. பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்தன.
இதையும் படிங்க: Republic Day 2025: மிரட்டும் இந்திய ராணுவ அணிவகுப்பு - பாதுகாப்பு படையில் ஆதிக்கம் செலுத்தும் கார், பைக்குகள்
இதன் காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நெல்லின் ஈரப்பதம் அளவான 17 சதவீதம் என்பதை தளர்த்தி 22 சதவீதமாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மத்திய குழு ஆய்வு
இதனை அடுத்து தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையினை வலியுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொண்டு வந்து வைக்கப்பட்ட நெல்மணிகளையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்வெளியில் உள்ள பயிர்களையும் நேற்று முன்தினம் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
மாதிரிகள் சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிளையாட்டம், மேமாத்தூர், கீழ்மாத்தூர், ஆத்துக்குடி, சேமங்கலம், வள்ளுவக்குடி, கொண்டல், இளந்தோப்பு, மணல்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு மற்றும் விநியோகம் துறை உதவி இயக்குனர் பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர் அபிஷேக் பாண்டே, மேலாளர் இந்திய உணவுகள் கழகம் கிரிஷ், முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு )செந்தில் உள்ளிட்ட மத்திய குழுவினர் ஆய்வினைத் தொடங்கி, நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
இந்நிலையில் விவசாயிகள் கூறுகையில், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக தளர்த்தி கொள்முதல் செய்வதோடு மட்டும் அல்லாமல், தரம் திரிபுகளான நெல்லின் நிறம் மற்றும் முளைத்த நெல்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதத்துக்கு இடைப்பட்ட சதவிகிதத்தில் உள்ள நெல்லுக்கு விவசாயிகளிடமிருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்தனர். மேலும் மாநில அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டுமென மாநில அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: MK Stalin : குடியரசு தினத்தில் முதல்வர் மதுரை வருகை.. அடுத்தடுத்து அரிட்டாபட்டி அப்டேட் !
பிரேமலதா விஜயகாந்த்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகை புரிந்தார். திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை வயல்களில் பார்வையிட்டு விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்தார். அவரிடம் அழுகிய நெற்பயிரை காண்பித்து விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்;
பருவம் தவறிய மழை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், முழு காப்பீட்டுத் தொகை வழங்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என பழி போட்டு தமிழக அரசு தப்பித்துக் கொள்ளக் கூடாது. உங்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வேங்கை வயல் விவகாரம்
மேலும் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும், பெரியார், அம்பேத்கர் போன்ற சரித்திரம் படைத்த தலைவர்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து தேமுதிக சார்பில் விவசாயிகளுக்கு உளுந்து பயிறு விதைகளை வழங்கினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

