பாடகர் சின்மயியைத் தாக்கும் வகையில் அமைந்திருக்கிறதா மருதா திரைப்பட ட்ரெய்லர்?
சின்மயியை ஏளனம் செய்யும் வகையில் உருவான ட்ரெய்லரை இளையராஜா வெளியிட்டிருப்பது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் தொல்லைகளக் குறித்த புகார் அளிக்கும் ஒருவரது கண்ணியம் காப்பாற்றப்படுவதில் தமிழ்நாடு தவறுகிறதா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
பிக்வே பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் இளையராஜா இசையில் வெளிவர இருக்கும் மருதா திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் இளையராஜாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரில் இடம்பெற்ற சில காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.
வைரமுத்து தன்னைப் பாலியல் ரீதியாகச் சீண்டியதாக பாடகர் சின்மயி பொதுவில் முன்வைத்த புகாரை ஏளனம் செய்யும் வகையில் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் பொதுமக்கள் பலரையும் முகம்சுளிக்க வைத்திருக்கின்றன.
சின்மயி உட்பட 17 பெண்கள் வைரமுத்து மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஒருபக்கம் வைரமுத்து மறுத்துவருகிறார். மற்றொருபக்கம் அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தி அவருக்கு ஆதரவளித்துவரும் தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தக் கட்சியின் ஆ.ராசா கூட வைரமுத்து மீதான புகார் ஒருநபர் அளித்தது என்று சொல்லி அந்தக் குற்றத்தை மறுத்திருந்தார். இதற்கிடையேதான் இந்த ட்ரெயிலரும் தற்போது வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்துத் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கும் சின்மயி, “என்னை ஏளனப்படுத்தவே இந்தக் காட்சியை வைத்திருக்கிறார்கள். இந்தத் துறையில் இப்படியான நபர்களுக்குப் பஞ்சமில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சின்மயியை ஏளனம் செய்யும் வகையில் உருவான ட்ரெய்லரை இளையராஜா வெளியிட்டிருப்பது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் புகார் அளிக்கும் ஒருவரது கண்ணியம் காப்பாற்றப்படுவதில் தமிழ்நாடு தவறுகிறதா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.