Ajit pawar: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் புயலா? கட்சியை உடைக்கிறாரா அஜித் பவார்?
மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த விவகாரமே இன்னும் அடங்காத நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த விவகாரமே இன்னும் அடங்காத நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு மகாராஸ்டிர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
மகாராஸ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெற்றிபெற்று உத்தவ் தாக்கரே ஆட்சியமைத்தார். ஆனால், சிவசேனாவிற்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஏக்னாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் வெளியேறி பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தனர். இதனால் கட்சி மற்றும் ஆட்சி இரணடையுமே இழந்தார் உத்தவ் தாக்கரே. இது தொடர்பான வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது.
இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் மகாராஸ்டிர அரசியலில் தற்போது மீண்டும் புயல் வீசத்தொடங்கியுள்ளது. மகாராஸ்டிராவில் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசு ஆட்சியமைத்துள்ளது. பாஜக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக இருந்து வருகிறார். சிவ சேனா இரண்டாக உடைக்கப்பட்டு ஏக்னாந்த் ஷிண்டே பின்னணியில் பாஜக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் எழுந்துள்ள கலகம் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் அக்கட்சி எம்எல்ஏக்கள் 40 பேரின் ஆதரவை திரட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கி வைத்திருப்பதாகவும், சமயம் வரும்போது அதை ஆளுநரிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. சிவசேனா கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஏக்னாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டால் ஆட்சியை இழக்க நேரிடும் என்பதால் மாற்று முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மஹாராஷ்டிராவில் ஆட்சியை இழக்க விரும்பாத பாஜக ஏக்னாத் ஷிண்டேவுக்கு பதிலாக மற்றொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறபப்டுகிறது. ஏக்னாத் ஷிண்டே தரப்பு தகுதியிழக்கும் நிலையில், அதனை ஈடு செய்ய தேசியவாத காங்கிரஸ் பக்கம் கவனத்தை திருப்பியிருப்பதாகவும் கூறப்படுகீறது.