எதிர்க்கட்சி தொகுதிகளுக்கு அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக தண்ணீரை திறக்க மறப்பது ஏன்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
136 அடி இருக்கும் பொழுது தண்ணீரை திறக்காமல் இருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,” திமுக அரசு மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தி, பாரபட்சம் பாத்து அதன்மூலம் குளிர் காயலாம் என பகல் கனவு காண்கிறது கள்ளந்திரி இரு போகம், மேலூர், திருமங்கலம் ஒரு போகும் பாசனத்திற்கு தண்ணீரை திறக்க வேண்டும் என அரசாணை உள்ளது. ஏற்கனவே ஜூனில் கள்ளந்திரிக்கு முதல் போகத்திற்கு தண்ணீரை திறக்கவில்லை.
விவசாயிகள் தொடர் கோரிக்கை:
தற்போது இரண்டாம் போகத்திற்கு நவம்பர் 10ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 15 ல் திறக்கப்படும் தண்ணீர் மேலூர் கால்வாய்க்கும், திருமங்கலம் பிரதான கால்வாய்க்கும் சொந்தமானது என்று விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது. இதற்கு முன்பு கூட முல்லைப் பெரியாறு அணை 116 அடியாக இருக்கும் பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கள்ளந்திரி, திருமங்கலம் ,மேலூர் ஆகிய பகுதிகளில் நல்ல விளைச்சல் தந்திருக்கிறது வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதை ஆய்வு செய்து கொள்ளட்டும்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்:
116 அடி இருக்கிறபோது மூன்று பகுதிகளுக்கும் தண்ணீரை திறந்து விட்டு அங்கே நல்ல விளைச்சல் பெற்று இருக்கிற வரலாறு நம்மிடத்தில் இருக்கிறது. குறைந்த தண்ணீரிலே விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும் என்கிற அனுபவத்தை பெற்றிருக்கிறார். ஆனால் தற்போது 137 அடியை தாண்டி இன்றைக்கு முல்லை பெரியாரில் நீர் இருக்கிற போது கூட, உங்களுக்கு திறக்க மனமில்லை.
மேலூர், திருமங்கலம் பாசனத்திற்கும் ,58 கால்வாய்க்கும் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உசிலம்பட்டி தொகுதி, திருமங்கலம் தொகுதி, மேலூர் தொகுதிகளில் விவசாயிகள் தினந்தோறும் போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கின்றார்கள். அரசு அதை கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர் ஆனால் அரசு செவி சாய்க்க மறுக்கிறது.
அ.தி.மு.க. போராடும்:
மேலூர்,திருமங்கலம், உசிலம்பட்டியை ஏன் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்? அமைச்சர் தலையீடு உள்ளதா? கிழக்கு தொகுதிக்கு மட்டும் அமைச்சரா அல்லது அவர் தமிழ்நாட்டுக்கு அமைச்சரா? இதை எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்று அதிமுக போராட்ட களத்தில் ஈடுபடும் அப்படி களத்தில் இறங்கினால் இந்த அரசு அதை எதிர்கொள்ள முடியாது. ஒரு கண்ணிலே வெண்ணெய், ஒரு கண்ணிலே சுண்ணாம்பு என்பது ஒரு பாரபட்சமாக இருக்கக் கூடாது 136 அடி இருக்கும் பொழுது தண்ணீரை திறக்காமல் இருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். அதிமுக ஆட்சிக்காலத்தில் இது போன்ற பாராபட்டம் காட்டப்படவில்லை.
மூன்று பகுதிகளுக்கும் சேர்த்து திறந்து தான் தண்ணீரை திறக்க வேண்டும் என்பதுதான் இப்போது கோரிக்கை உள்ளது. இதற்கு உரிய விளக்கத்தை அரசு சொல்ல வேண்டும். அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக எதிர்க்கட்சி தொகுதிகளான திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட தொகுதிகளை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை உங்களுக்கு புகட்டுவார்கள்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே? காவிரியில் தண்ணீரை பெற்று தர முடியாத நீங்கள் தண்ணீரை வைத்துக்கொண்டு தண்ணீரை தர மறுப்பது விவசாயிகளிடத்திலே கண்ணீரை வரவழைத்துள்ளது. நீங்கள் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணை பெற்று மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கூறினார்.