தேனி நகராட்சியை தமிழ்நாடு அரசு மாநகராட்சியாக அறிவிக்காதது ஏன்?
தமிழகத்தில் புதியதாக மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டபோது, தேனி நகராட்சியை மாநகராட்சி ஆக்குவதற்கு அதற்கு பரிந்துரைக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டதற்கு நகராட்சியின் வருவாய் இழப்பே காரணம் என கூறப்படுகிறது
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப அந்தப் பகுதி மாநகராட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. தமிழகத்தில் மாநகராட்சிகள் மக்கள் தொகை அடிப்படையிலும், மாநகராட்சியின் வருவாய் அடிப்படையிலும், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் மதுரை மாநகராட்சியும் சேலம் மாநகராட்சியும் உள்ளது. இந்த ஐந்து மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். காரணம் இந்த மாநகராட்சிகளின் வருவாயே.
தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் வரையிலும் இருக்கிறது. இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்ற தலைவராகவும், ஒருவர் மாமன்ற துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார்.
மாநகராட்சியின் உறுப்பினர்களை கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களை கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓர் மாநகராட்சி நிர்வாகம், நகரில் உள்ள சாலைகள் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், பிறப்பு/இறப்பு பதிவு, கழிவுகள் அகற்றல் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளது. மேலும் மாநகராட்சிகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தீயணைப்பு மற்றும் முதலுதவி வண்டி சேவைகளையும் வழங்க முடியும். பூங்காக்கள் மற்றும் கட்டடங்களையும் பராமரிப்பது, இவற்றிற்கான நிதி வருவாய் சொத்து வரி, மனமகிழ்வு வரி, நுழைவு வரி மூலமும் பயன்படுத்தும் சேவைகளுக்கான கட்டணங்கள் மூலமும் மாநகராட்சி வருவாய் பெறுகிறது. மாநகராட்சி நிதியின் மூலம் அந்த நகரில் மாநகராட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட பல நல திட்டங்களையும் செய்ய முடியும்.
தமிழகத்தில் முன்னதாக 15 மாநகராட்சிகள் இருந்தன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், சில தினங்களுக்கு முன்பு நடந்த சட்டசபை மானிய கூட்டத்தில் தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலுார், கும்பகோணம், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி ஒரு புதிய அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள் உருவாகிறது என்ற பேச்சு எழத் தொடங்கியவுடன், தேனி மாவட்டமும் மாநகராட்சி அந்தஸ்தை பெறும் என பலராலும் பேசப்பட்டு வந்தது. தேனி-பெரியகுளம் நகராட்சிகளை இணைத்து தேனி மாநகராட்சி அறிவிப்பு வெளியாகும் என்ற பேச்சு இருந்தது. தேனி நகராட்சி, மாநகராட்சி அந்தஸ்தை பெறுவதற்கான கோப்புகள் தயார் செய்தும் நகராட்சி அலுவலர்கள் அரசுக்கு சமர்ப்பித்தனர்.
ஆனால் இறுதியில் தேனி நகராட்சி மாநகராட்சியாகும் அறிவிப்பு வெளியாகவில்லை. தேனி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படாதது தேனி மாவட்ட மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தேனி நகராட்சி மாநகராட்சியாக அந்தஸ்து பெறாமல் இருப்பதற்கு சில காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேனி மற்றும் பெரியகுளம் நகராட்சிக்கு இடையே சுமார் 14 கி.மீ. இடைவெளி உள்ளது. இதனை ஒருங்கிணைத்து மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டால், தேனி மாநகராட்சியின் நிர்வாகத்திற்கு சிரமம் ஏற்படும். ஆனால் இதற்கு மாற்றாக தேனி நகராட்சி அலுவலர்கள் ஒரு மாற்று முடிவை எடுக்கும் பட்சத்தில் இதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும்.
அதாவது தேனிக்கு அருகில் உள்ள பூதிப்பூரம், வீரபாண்டி, குன்னுார், பழனிசெட்டிபட்டி அம்மச்சியாபுரம், அரண்மைனைப்புதுார், அரசு மருத்துவகல்லுாரி உள்ள க.விலக்கு வரை எல்லை வரையறை செய்து அரசுக்கு ஆவணங்கள் அனுப்பி இருந்தால் தேனி நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாறி இருக்கும். மேலும் தேனி நகராட்சி மாநகராட்சி ஆவதற்கான கோப்புகள் முன்கூட்டியே தயார் செய்யாததும் அவசர அவசரமாக தயார் செய்ததும், தேனி மாநகராட்சி ஆவதற்கான வாய்ப்புகள் குறைந்தது. மேலும் மாநகராட்சி அந்தஸ்து பெற வேண்டும் என்றால் மிக முக்கியம் வருவாய் ஆகும். ஆனால் சில மாதங்களாக தேனி நகராட்சி கடும் நிதி சுமையில் தத்தளித்ததும் குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கின்றனர்.