ஜல்லிக்கட்டு தீர்ப்பை வரவேற்று, பொதுமக்களுக்கு சர்பத், மோர், ரோஜா பூ கன்றுகளை வழங்கி மகிழ்ந்த இளைஞர்கள் !
பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கும் மோர் , சர்பத் மற்றும் ரோஜா பூ செடிகளை கொடுத்து தீர்ப்பை கொண்டாடினார்கள்.
பல நூற்றாண்டு காலமாக தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். அதிலும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வரும் நிலையில், இந்த போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு இளைஞர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் நடத்த போராட்டமானது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
பேராட்டத்தை அடுத்து, அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் என்ற பெயரில் நிரந்தரச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பானது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை இல்லை, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது, தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஜல்லிக்கட்டு போட்டி இணைந்தது அல்ல என்ற கருத்தை ஏற்க முடியாது எனக்கூறி தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை தமிழகத்தில் அரசியல் கட்சியினர் எந்த மாறுபாடின்றி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கையில் ஜல்லிக்கட்டு தீர்ப்பை வரவேற்று, பொதுமக்களுக்கும் சர்பத், மோர், ரோஜா கன்றுகளை வழங்கி மகிழ்ச்சியே வெளிப்படுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சாலையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தீர்ப்பை கொண்டாடும் விதமாக சர்பத் மோர் மற்றும் ரோஜா பூ செடி கன்றுகளை சாலையில் செல்லும் பொது மக்களுக்கு வழங்கினார்கள். மேலும் பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கும் மோர் , சர்பத் மற்றும் ரோஜா பூ செடிகளை கொடுத்து தீர்ப்பை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்